மும்பை : 2023ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் இந்திய வீரர்கள் தான் உள்ளனர்.
நான்காவது இடத்தில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஐந்தாவது இடத்தில் இலங்கை பேட்ஸ்மேன் இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டு என்றே கூறலாம். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை நடந்ததை ஒட்டி அதற்கு முன் ஒவ்வொரு அணியும் அதிக ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்றது.

2022 டி20 உலகக்கோப்பை நவம்பர் மாதம் முடிந்தது. அதன் பின் அனைத்து அணிகளும் அதிக ஒருநாள் தொடர்களில் பங்கேற்கத் துவங்கின. இந்திய அணியும் 2023ஆம் ஆண்டு மட்டும் உலகக்கோப்பை தொடரையும் சேர்த்து 35 ஒருநாள் போட்டிகளில் ஆடியது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார்.
முதல் இடம் - சுப்மன் கில்
2023ஆம் ஆண்டு 29 ஒருநாள் போட்டிகளில் ஆடிய அவர் 1584 ரன்கள் குவித்து இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் அவரது பேட்டிங் சராசரி 63.36 ஆகும். ஐந்து சதம், ஒன்பது அரைசதம் அடித்து இருந்தார். ஆனால், அவர் உலகக்கோப்பை தொடரில் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை.
இரண்டாவது இடம் - விராட் கோலி
2023 ஆம் ஆண்டு விராட் கோலி 24 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் ஆடி 1377 ரன்கள் குவித்தார். ஆறு சதம், எட்டு அரைசதம் அடித்து இருந்தார். 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
மூன்றாவது இடம் - ரோஹித் சர்மா
2023ஆம் ஆண்டு 26 இன்னிங்க்ஸ்களில் 1255 ரன்கள் குவித்தார் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு முழுவதும் ரன் சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் இன்றி, அணிக்காக அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஆடி இருந்தார் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு அவரது ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகும்.
நான்காவது இடம் - டேரில் மிட்செல்
நியூசிலாந்து அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் 25 இன்னிங்க்ஸ்களில் 1204 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 52.34 ஆகும். தொடர்ந்து போட்டிகளில் ரன் குவித்து வந்தார். அவரது ஃபார்ம் சிறப்பாக இருந்த நிலையில் சிஎஸ்கே அணி அவரை 14 கோடி கொடுத்து ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது.
ஐந்தாவது இடம் - பதும் நிசங்கா
இலங்கை துவக்க வீரர் பதும் நிசங்கா 29 இன்னிங்க்ஸ்களில் 1151 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணி 2023ஆம் ஆண்டு படுமோசமாக செயல்பட்ட போதும் பதும் நிசங்கா அதிக ரன் குவித்து இருக்கிறார். இரண்டு சதம், ஒன்பது அரைசதம் அடித்து இருக்கிறார்.