ENG vs SL: விராட் கோலியின் இமேஜை காலி செய்த இங்கிலாந்து வீரர்.. உறைந்து போன ரசிகர்கள்
மும்பை: உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என கடந்த காலங்களில் பலரும் புகழ்ந்து உள்ளனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் போட்டி செயல்பாடு மோசமான வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தற்போது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் செய்த சாதனையால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2020 கொரோனா லாக்டவுனுக்கு முன்பு வரை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். அப்போது டெஸ்ட் உலகின் சூப்பர்ஸ்டாராக இருந்தார். ஆனால், லாக்டவுனுக்கு பின் அவரது ஃபார்ம் சரிவை சந்தித்தது.

தற்காலத்தில் கிரிக்கெட் ஆடும் வீரர்களிலேயே நான்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் என விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட்டை குறிப்பிட்டு வருகின்றனர். 2020ஆம் ஆண்டின் முடிவில் இந்த நால்வரில் விராட் கோலி அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரராக இருந்தார்.
2020 ஆம் ஆண்டில் முடிவில் விராட் கோலி 27 டெஸ்ட் சதங்களை அடித்திருந்தார். அப்போது ஸ்டீவ் ஸ்மித் 26 சதங்கள், கேன் வில்லியம்சன் 21 சதங்கள், ஜோ ரூட் 17 சதங்கள் அடித்து இருந்தனர். அப்போது பலரும் ஜோ ரூட்டை இந்த பட்டியலில் சேர்ப்பது தவறு என்றெல்லாம் கூட விமர்சனம் செய்து வந்தனர். தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து இதே நான்கு பேட்ஸ்மேன்களை பார்க்கும் போது எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது.
2024 இல் தற்போது ஜோ ரூட் 33 டெஸ்ட் சதங்களை அடித்து இருக்கிறார். கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா 32 டெஸ்ட் சதங்களை அடித்து உள்ளனர். ஆனால், விராட் கோலி 29 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். இந்த நான்கு ஆண்டு காலகட்டத்தில் விராட் கோலி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். ஆனால், ஜோ ரூட் 16 டெஸ்ட் சதங்களை அடித்து வியக்க வைத்துள்ளார்.
2021 இல் ஆறு சதங்கள், 2022 இல் ஐந்து சதங்கள், 2023 இல் இரண்டு சதங்கள் மற்றும் 2024 இதுவரை மூன்று சதங்கள் அடித்திருக்கிறார் ஜோ ரூட். 44 மாதங்களில் 16 டெஸ்ட் சதங்களை அடித்துத் தள்ளி இருக்கிறார். தற்காலத்தின் நான்கு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த பட்டியலிலும், அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த பட்டியலிலும், அதிக டெஸ்ட் அரை சதங்கள் அடித்த பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.
ஜோ ரூட் இன்னும் 1105 ரன்கள் குவித்தால் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை அவர் பிடிப்பார். மேலும், தற்போது 33 வயதாகும் ஜோ ரூட் இன்னும் 3648 ரன்கள் குவித்தால் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முறியடிப்பார்.
முன்னதாக விராட் கோலி தான் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என பலரும் கூறினார்கள். ஆனால், தற்போது 35 வயதாகும் நிலையில் விராட் கோலி அந்த இடத்தை அடைவது கடினமே. இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி எப்படி செயல்படுகிறார்? என்பதை பொறுத்து அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்க முடியுமா? என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications