சென்னை : யூட்யூபில் அதிக பார்வைகளை பெற்ற கிரிக்கெட் வீடியோ எது? என்று கேட்டால் அனைவரும் தோனி, ரோஹித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோரின் வீடியோக்களில் ஏதோ ஒன்றாகத் தான் இருக்கும் என நினைப்போம்.
ஆனால், ஒரு தமிழக கிரிக்கெட் வீரரின் வீடியோ தான் யூட்யூபில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக உள்ளது. அதிலும் அதிக பார்வைகளை பெற்ற கிரிக்கெட் வீடியோக்களில் முதல் இரண்டு இடங்களிலும் அவரது அவர் பேட்டிங் செய்த வீடியோ தான் உள்ளது. அந்த தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தான்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசஅணிக்கு எதிராக அவர் கடைசி இரண்டு ஓவர்களில் ஆடிய ஆட்டங்களே அந்த இரண்டு வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. அந்த இரண்டு வீடியோக்கள் தான் யூட்யூப் தளத்தில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட கிரிக்கெட் வீடியோக்கள் ஆகும்.
அந்த இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலைஇருந்தது. இந்திய அணி, வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்து விடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் இடையே நிலவியது. தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் 22 ரன்கள் குவித்தார். அந்த ஓவர் மட்டும் தனி வீடியோவாக இலங்கை கிரிக்கெட் அமைப்பால் யூட்யூபில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவிற்கு மட்டும் 14.9 கோடி பார்வைகள் கிடைத்துள்ளது. இதுவே யூட்யூபில் அதிக பார்வைகளை பெற்ற கிரிக்கெட் வீடியோக்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் நான்கு பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. ஐந்தாவது பந்தில் விஜய் சங்கர் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சந்தித்தார். அந்த பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் அவர் சவுமியா சர்க்காரின் பந்து வீச்சில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்த கடைசி ஓவர் மட்டும் தனி வீடியோவாக இலங்கை கிரிக்கெட் அமைப்பால் யூட்யூப்-இல் வெளியிட்டது. இந்த வீடியோவிற்கு 24.3 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. இதுவே யூட்யூப்-இல் அதிக பார்வைகளை பெற்ற கிரிக்கெட் வீடியோவாகும். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் யூட்யூப்-இல் அதிக பார்வைகளை பெற்ற முதல் இரண்டு கிரிக்கெட் வீடியோக்களிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இதே அதிக பார்வைகளைப் பெற்ற கிரிக்கெட் வீடியோக்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 140 ரன்கள் அடித்த வீடியோ மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு 11.1 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்த வீடியோ நான்காவது இடத்தில் உள்ளது. இதற்கு 10.7 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சச்சின் பாடம் எடுக்கும் வகையில் பேட்டிங் செய்த வீடியோ ஐந்தாவது இடத்தில் ஒரு கோடி பார்வைகளுடன் உள்ளது.