மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் 43 வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் 43 வயது ஆகிவிட்டதால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன் பட்டத்துடன் தோனி செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இதனால் கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் சிஎஸ்கே வெளியேறியதால் இம்முறை தோனி மீண்டும் ஒருமுறை விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தோனி தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு வந்திருக்கிறார். மும்பையில் அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தோனி பங்கேற்று இருக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்ற பிறகு தோனி ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு 12 மணிக்கு தோனியின் நண்பர்கள் மற்றும் மனைவி அனைவரும் இணைந்து தோனிக்கு கேக் ஒன்றை வழங்கி இருக்கிறார்கள். அப்போது தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி இருவரும் இணைந்து கேக் வெட்டினர். இதனை அடுத்து ஒரு பகுதியை இருவரும் தங்களுக்குள் மாற்றி கேக்கை ஊட்டிவிட்டனர்.
அதன் பிறகு யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தோனியின் காலில் சாக்ஷி விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இதனை பார்த்ததும் தோனி கையை காட்டி ஆசீர்வாதம் செய்து சிரித்தார். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியின் போது பின்னணியில் அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் என்ற பாடல் ஒலித்தது.
நடிகர் ரஜினிகாந்த் காக போடப்பட்ட இந்த பாடல் தல தோனிக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து தோனியின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் தோனியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.