ராஞ்சி :இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இளைஞர்களுக்கு எப்போதுமே ஒரு ஹீரோவாக திகழ்கிறார். சச்சினுக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் தோனி இளைஞர்களுக்கு முத்தான அட்வைஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார். அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தோனி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அதில் கிரிக்கெட் தொடர்பான கேள்விகளை விட தனித்துவமான கேள்விகள் தான் அதிகம் இடம் பெற்றிருந்தது. அதில் நெறியாளர் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த தோனி இங்கே வந்திருக்கும் திருமணம் ஆகாத நிறைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு பெண் தோழி இருந்தால் இதை மட்டும் உங்களுக்கு தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். உங்களுடைய காதலி மட்டும் மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்று நீங்கள் எண்ண வேண்டாம்.
நீங்கள் யாருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தோனி கூறினார். தோனியின் இந்த அறிவுரையை கேட்டு அங்கிருந்து இளைஞர்கள் சிரிக்க தொடங்கிவிட்டனர். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த தோனி இளைஞர்களை செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் செல்போனை முடிந்தவரை தவிர்க்க பாருங்கள் சமூக வலைத்தளத்தில் வரும் கமெண்ட்ஸ்களை படிக்க வேண்டாம். சிலர் விளையாட்டுக்காகவோ இல்லை பதிவு போட வேண்டும் என்பதற்காக சில கருத்தை போட்டு இருப்பார்கள். அது அவர்கள் மனதில் இருந்து கூட வந்திருக்காது. ஆனால் அதை நாம் படிக்கும் போது நமது மனம் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மொபைலை பயன்படுத்தாதீர்கள். சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடாமல் இருங்கள் என்று தோனி கூறியுள்ளார்.