சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் 42 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் அதிக ரசிகர்கள் உடைய வீரர் என்றால் அது நம்ம தல தோனி தான்.
பிறந்தது ராஞ்சியாக இருந்தாலும் தமிழகத்தின் செல்ல பிள்ளையாக தோனி வலம் வருகிறார். இந்த நிலையில் தோனி மூன்று ஐசிசி கோப்பையை வென்று இருக்கிறார். இத்தனை சதங்கள் அடித்து இருக்கிறார்? இத்தனை சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்கள் என்று சின்ன குழந்தைகள் கூட தெரியும்.

ஆனால் தோனி பற்றி தெரியாத சில விஷயங்கள் பற்றி தான் நாம் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம் கிரிக்கெட் வீரர்களில் பலர் சைவமாக தான் இருக்கிறார்கள். சிலர் அசைவமாக இருந்து சைவமாக மாறி இருக்கிறார்கள். ஆனால் நம்ம தல தோனி எப்போதுமே அசைவம் தான். தோனிக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை நீங்கள் வறுத்து வைத்தால் போதும் தோனிக்கு வேறு எதுவும் வேண்டாமாம்.
இதேபோன்று தோனிக்கு சாக்லேட் வகைகளும்,இனிப்பு வகைகளும் மிகவும் இஷ்டமாம். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் இனிப்பு சாப்பிடுவது கெடுதல் என்பதற்காக அதனை தோனி குறைத்துக் கொண்டிருக்கிறார். தோனிக்கு சிறுவயதிலிருந்தே பைக்குகள் மீது அவ்வளவு இஷ்டமாம். தனது நண்பர்கள் பைக்கை வாங்கி சுற்றுவது தான் அவருக்கு பிடிக்குமாம். இதனால் கையில் பணம் வந்தவுடன் டோனி தனக்கு பிடித்த அனைத்து பைக்குகளையும் வாங்கி இருக்கிறார்.
அவரிடம் சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் தற்போது கைவசம் இருக்கிறது இதில் தோனிக்கு பிடித்த பைக் என்றால் கவாஸ்கி நிஞ்சா , டுகாட்டி 1098, என பல வகைகள் இருக்கிறது. தோனிக்கு இசை என்றால் மிகவும் பிடிக்குமாம். அதுவும் நம்ம ஊரில் எப்படி இளையராஜா பாடல்கள் கேட்கிறோமோ அந்த மாதிரி தோனி பழைய ஹிந்தி பட பாடல்கள் தான் மிகவும் விரும்பி கேட்பாராம். நடிகர் கிஷோர் குமார் பட பாடல்கள் தோனிக்கு மிகவும் பிடிக்குமாம்.
நம்ம வீட்டில் எப்போதுமே இந்த போன நோண்டாதப்பா. இந்த போனை கீழே வைத்தால் தான் நீ உருப்படுவாய் என்று நமது பெற்றோருக்கு கேட்டிருப்போம். அதை தோனி தன் வாழ்நாள் பழக்கமாகவே வைத்திருக்கிறார். தோனிக்கு மொபைல் போனை பயன்படுத்துவதை பிடிக்காதாம். இதனால் தோனியை யாராவது தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அவருடைய மேலாளரை முதலில் தொடர்பு கொண்டு அதன் பிறகு தான் தோனி நம்மிடம் பேசுவாராம்.
இதனை அறிந்த பிசிசிஐ தோனியிடம் பேசுவதற்காகவே அவருக்கு என தனி செல்போனை வழங்கி இருந்திருக்கிறார்கள். தோனி என்றால் இப்போது அவருடைய பேட்டிங் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு தோனி என்றால் அவருடைய நீண்ட தலைமுடி தான் ஞாபகத்துக்கு வரும். அப்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நீண்ட தலை முடியை வைத்திருப்பார்.
அதனை பார்த்து தான் தோனியும் முடியை வளர்த்துக் கொண்டாராம். பிறகு முடி உதிரும் பிரச்சனை ஆரம்பித்ததால் தோனி தனது தலை முடியை வெட்டினார். இது தேசிய அளவிலான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் தோனி தலைமுடியை வெட்டிய செய்தி இடம்பெற்றது.