விஜய் ஹசாரே போட்டியில், டோணி அதிரடி சதம்.. சரிவிலிருந்த ஜார்கண்ட்டை வெற்றிபெற வைத்து அசத்தல்
கொல்கத்தா: விஜய் ஹசாரே உள்ளூர் போட்டியில், மகேந்திர சிங் டோணியின் அசத்தல் சதம் உதவியோடு அவர் தலைமை தாங்கும் ஜார்கண்ட் அணி, சட்டீஸ்கர் அணியை எளிதாக வீழ்த்தியது.
ஒருநாள் போட்டிக்கான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டோணி தலைமையிலான ஜார்கண்ட் அணி சட்டீஸ்கருக்கு எதிராக முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 129 பந்துகளில், டோணி 107 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து பேட் செய்த சட்டீஸ்கர் அணி 38.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஜார்கண்ட் அணி தவித்தபோது களம் புகுந்த டோணியின் சதம் அந்த அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. 57 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து ஜார்கண்ட் தடுமாறியபோதிலும், டோணியுடன் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சப்பாஷ் நதிமுடனான, பார்ட்னர்ஷிப் 151 ரன்களை குவித்தது.
நதீம் 53 ரன்கள் குவித்து, கேப்டன் டோணிக்கு தோள் கொடுத்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். டோணியின் சதத்தில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உள்ளடங்கியிருந்தது சிறப்பு.


Click it and Unblock the Notifications