டர்பன் : இந்திய கிரிக்கெட்டில் ஒப்பற்ற தலைவனாக விளங்கியவர் மகேந்திர சிங் தோனி. இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வாங்கி கொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு பிறகு அதிக ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய ஒரே நிகரற்ற தலைவன்.
கேப்டன் கூல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி இன்று தான் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

முதல் போட்டியிலே தோனி செய்த சம்பவம் காலத்தால் இன்றும் பேசக்கூடியவை. தோனி இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக செயல்படாத நிலையில் தோனிக்கு டி20 உலக கோப்பையை வழிநடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதில் முதல் ஆட்டம் மழையால் ஸ்காட்லாந்துக்கு எதிராக கைவிடப்பட்ட நிலையில் தன்னுடைய இரண்டாவது போட்டியில் தான் களத்தில் முதல்முறையாக கேப்டனாக தோனி செயல்பட்டார்.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தானில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா அரை சதம் அடிக்க கேப்டனாக தோனி முதலில் 33 ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களும் தடுமாறினர். குறைந்த இலக்கை வைத்துக்கொண்டு தோனி பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தினார்.
மேலும் தோனியின் பில்டிங் செட்டப்பும் பாராட்டத்தக்க வகையில் முதல் போட்டியில் இருந்தது. பாகிஸ்தானும் இருவது ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, ஆட்டம் சமனில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனாக இருந்த சோயிப் மாலிக், ஆட்டம் முடிந்தது என நினைக்க அப்போதுதான் நடுவர்கள் ஒரு ட்விஸ்ட் வைத்தனர்.
டி20 கிரிக்கெட்டில் வெற்றியாளரை தீர்மானிக்க பவுல் அவுட் என்ற முறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஐந்து பவுலர்கள் யார் அதிக முறை ஸ்டெம்பை அடிக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த தோனி பயிற்சியின் போதே சில வீரர்களை பவுல் அவுட் செய்ய பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி இருந்திருக்கிறார்.
அப்போதே இதெல்லாம் நடக்காது என கருதாமல் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தோனி எடுத்த முடிவு அவர் பின்னால் இந்தியா காணக் கிடைக்காத ஒரு சிறந்த கேப்டனாக இருக்கப் போகிறார் என்பதை காட்டியது. மேலும் பவுல் அவுட் செய்யும்போது ஸ்டம்புக்கு நேராக தோனி பின்னால் நின்று கொண்டார்.
மேலும் என்னை நோக்கி பந்தை வீசு அது நேராக ஸ்டம்பில் படும் என்றும் தோனி ஐடியா கொடுத்தார். இந்த சின்ன ஐடியா காரணமாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. அனுபவம் வாய்ந்த கேப்டனாக இருந்த சோயிப் மாலிக் பவுல் அவுட் என்றாலே என்னன்னு தெரியாது என்று கூற தோனி அதற்கு முன்பு அணியை பயிற்சி அணியை எடுக்க வைத்திருந்தார் .