லக்னோ: பிசிசிஐயின் ரோபோ நாயை தோனி தூக்கிச் சென்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் அது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து பல்வேறு காரணங்களையும் சொல்லி கிண்டல் செய்து வருகின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் எப்போதும் தோனி ஸ்டம்ப்பை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ரோபோ நாயை அவர் தூக்கிச் சென்றார். அந்தக் காட்சி வேடிக்கையாக இருந்தது.

தற்போது ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பிசிசிஐயும் அதை போட்டி ஒளிபரப்பின் போது பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரோபோ நாய் ஒன்றை கேமராமேனாக பயன்படுத்தி வருகிறது. அந்த ரோபோ நாயை கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டே இயக்கலாம்.
அதன் மூலம் மைதானத்தை சுற்றிலுமாக படம் பிடிப்பதற்கு அந்த ரோபோ நாய் உதவும். அதை பார்த்த தோனி அந்த நாய் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். போட்டி முடிந்த பிறகு அதை தனது கையில் எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டுச் சென்றார். அந்த காட்சியைத் தான் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார். ஆயுஷ் பதோனி 17 பந்துகளில் 22 ரன்களையும், அப்துல் சமத் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து இருந்தனர்.
அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களும் ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு ஐந்தாம் வரிசையில் இறங்கிய சிவம் துபே நிதானமாக ஆடினாலும் 37 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். தோனி ஏழாம் வரிசையில் இறங்கி அதிரடியாக 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.
இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.