தோனி மீது அவமதிப்பு வழக்கு.. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.. மனுதாரர் சரமாரி புகார்
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதை தோனியிடம் தெரியப்படுத்துங்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் திவாகரும் தோனியும் நாடு முழுவதும் இணைந்து தோனி பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அதன்படி தோனியின் பெயரில் பல விளையாட்டு பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி திவாகர் மற்றும் தாஸ் மீது தோனி கிரிமினல் வழக்கு ஒன்றை கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்தார். தமது பெயரில் கிரிகெட் அகாடமி தொடங்கப்படும் ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கிய நிலையிலும் தொடர்ந்து தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்படுவதாகவும் இதனால் தமக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் தோனி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சர்மா திவாகர் மற்றும் தாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் திவாகர் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அதில் தமது பெயருக்கு தோனி களங்கம் விதிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும், இதனால் தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி பிரதீபா சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி மீது நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் இதனை தோனியிடம் ஈமெயிலிலோ இல்லை போன் மூலமாகவோ தெரியப்படுத்துங்கள் என்று நீதிமன்ற சார் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் தோனி தரப்பினர் தங்கள் மீது பொய் புகார்களை கூறி வருவதாகவும் தங்களைப் பற்றி பேசக்கூடாது என்று தோனிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திவாகர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தோனி வழக்கறிஞர் தங்களைப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் செய்தியாக வந்து இருப்பதாகவும் அதனை உடனடியாக நீக்க கூகுள் மற்றும் மற்ற சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திவாகர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு வரும் ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications