மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக விளங்கியவர் தோனி. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்ற தோனி தனது சொந்த வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார்.
அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இது குறித்து தோனியின் வாழ்க்கை படமான எம் எஸ் தோனி திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது. ஆனால் அது படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனைக் காட்சி என ரசிகர்கள் நகர்ந்து சென்று விட்டனர்.

ஆனால் அது உண்மை சம்பவம் தான் என்று தற்போது வெளிவந்திருக்கிறது. நாம் ஏற்கனவே தோனியின் அக்காவுக்கு அவரது நண்பரையே கட்டி வைத்த கதையை கேட்டோம். ஆனால் தோனியின் முதல் லவ் ஃபெயிலியர் குறித்து பெரிதும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது 2002 -2003 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கதையாகும். இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தோனி இந்தியா ஏ தொடர்களில் அதிகம் இடம் பெற்று வந்தார். ஜிம்பாப்வேவில் நடைபெற்ற முத்தரப்பு இந்திய அணி தொடரில் தோனி விக்கெட் கீப்பராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் ஆறு இன்னிங்ஸில் தோன்றி 362 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தான் கங்குலியின் கவனத்தை தோனி ஈர்த்து இந்திய அணிக்குள் வந்தார்.
இந்த காலகட்டத்தில் தோனி பிரியங்கா ஜா என்ற ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். தோனிக்கு பக்க பலமாக அந்த பெண் இருந்திருக்கிறார். தோனியை பற்றி நன்கு தெரிந்தவராகவும் அவர் மனம் காயப்படும் போதெல்லாம் அவருக்கு துணையாக நின்று வெற்றி பெற உறுதுணையாக பிரியங்கா திகழ்ந்திருக்கிறார்.
இனி வாழ்ந்தால் பிரியங்கா ஜாவோடு தான் வாழ்வேன் எனவும் தோனி முடிவெடுத்திருந்தார். அந்த நிலையில் தான் பிரியங்கா ஜா ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இந்த விபத்து நடைபெறும் போது தோனி வெளிநாட்டில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தாராம். பிரியங்காவை பார்ப்பதற்காக இந்தியா வந்த போது தான் தோனிக்கு இந்த செய்தி தெரிய வந்திருக்கிறது.
இதனால் மனமுடைந்த தோனி சாலைகளில் அழுது புலம்பி இருக்கிறார். ஒருபுறம் தான் ஆசைப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை கிடைத்து அதில் வெற்றி பெற வேண்டிய சூழலும் மறுபுறம் தன்னுடைய உயிர் காதலி உயிரிழந்ததும் ஒரே நேரத்தில் தோனிக்கு நடந்து இருக்கிறது. ஆனால் அதிலிருந்து மீண்டு தோனி நாட்டிற்காக விளையாடி பல வெற்றிகளை பெற்று ஸ்டார் வீரராக உயர்ந்தார். இந்த சம்பவம் நடைபெற்று ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் சாக்ஷியை தோனி திருமணம் செய்தார்.