“தோனிக்கே நம்பிக்கை வரவில்லை”.. சிஎஸ்கே அணிக்காக ஆடுவதில் சிக்கல்.. பேட்டிங் கோச் ஹஸ்ஸி சொன்ன தகவல்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான தோனி எப்போது களமிறங்குவார் என்ற மிகப்பெரிய கேள்விக்கான விடையை ரசிகர்கள் ஆவலுடன் தேடி வருகின்றனர். அவர் வலைப்பயிற்சியில் அபாரமாக பேட்டிங் செய்தாலும், அவரை உடனடியாக ஆடுகளத்தில் இறக்கச் சிஎஸ்கே நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தோனிக்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை என்று கூறி இருக்கிறார் மைக்கேல் ஹஸ்ஸி. தோனியின் வருகைக்காகத் தவம் கிடக்கும் ரசிகர்களுக்கு, சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ள தகவல் சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
கால் தசைப்பிடிப்பு காயம் காரணமாக இந்த சீசனின் தொடக்கப் போட்டிகளில் இருந்து தோனி விலகியிருந்தார். அவர் அணியுடன் தொடர்ந்து பயணித்து வந்தாலும், அவரது உடல் தகுதி இன்னும் முழுமையாகப் போட்டிக்குத் தயாராகவில்லை. இது குறித்துப் பேசிய மைக்கேல் ஹஸ்ஸி, "தோனி எப்போது களமிறங்குவார் என்பது எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. அவர் காயத்திலிருந்து மிகச் சிறப்பாக மீண்டு வருகிறார். வலைப்பயிற்சியில் அவரது பேட்டிங் எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஆனால், பேட்டிங்கை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது.

ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ஒரு பினிஷராக அவர் களமிறங்கும் போது, 1 அல்லது 2 ரன்களை மிக வேகமாக ஓடி எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தற்போது விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதில் தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். வேகமாக ஓடுவதில் அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. அவர் அந்த நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆடும் லெவனில் இணைவார். ரசிகர்களைப் போலவே நானும் அவரது வருகைக்காகக் காத்திருக்கிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் வெறும் சிக்சர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. ஃபீல்டர்களை ஏமாற்றி வேகமாக ஓடி ரன் சேர்ப்பது ஆட்டத்தின் முடிவையே மாற்றும். அதனை உறுதி செய்த பிறகே தோனியை ஆடுகளத்தில் இறக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிஎஸ்கே அணி தொடர் சறுக்கல்கள் மற்றும் முன்னணி வீரர்களின் தொடர் காயங்களால் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது.
இக்கட்டான இந்தச் சூழலில் தோனியின் அபாரமான அனுபவம் அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆடுகளத்தில் அவர் களமிறங்காவிட்டாலும், அவரது வழிகாட்டுதல் இளம் வீரர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அவர் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி தனது முழு உடல் தகுதியை நிரூபிக்கும் வரை, 'தல' தோனியை மீண்டும் மஞ்சள் சீருடையில் மைதானத்தில் பார்க்க சிஎஸ்கே ரசிகர்கள் இன்னும் சில காலம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications