தோனிக்கு Hall of Fame கௌரவம் வழங்கிய ஐசிசி.. வாழ்நாளில் மறக்க முடியாத பெருமை என தோனி நெகிழ்ச்சி
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும் உலக கோப்பையை வென்று தந்த நிகரற்ற கேப்டனுமான தோனிக்கு Hall of fame என்ற அந்தஸ்தை ஐசிசி வழங்கி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு Hall of fame அந்தஸ்து வழங்கப்படும்.ஒவ்வொரு விளையாட்டிலும் இதுபோன்ற ஒரு அந்தஸ்தை அந்தந்த விளையாட்டு அமைப்பு வழங்கும். அதன்படி கிரிக்கெட்டில் Hall of fame கவுரவம் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு 2011 உலகக்கோப்பை, 2007 டி20 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்த தோனிக்கு ஐசிசி ஹால் ஆஃப் பேம் கௌரவம் கிடைத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 17,266 ரன்கள் அடித்திருக்கும் தோனி, விக்கெட் கீப்பராக 829 பேரை ஆட்டமிழக்க வைத்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காக 538 சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடி இருக்கிறார். தமக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி," ஐசிசி கௌரவம் எனக்கு கிடைத்திருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கின்றேன். பல தலைமுறைகளாக கிரிக்கெட்டுக்கு பங்களிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த கவுரவம் எனக்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல ஜாம்பவான்களின் பெயருடன் தமது பெயர் இடம் பெற்றிருக்கும் இந்த நிகழ்வை நான் என்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பேன் என்று தோனி கூறினார். இந்திய அணிக்காக 2004 ஆம் ஆண்டு முதன்முதலாக தனது 23வது வயதில் தோனி அடி எடுத்து வைத்தார். தன்னுடைய ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்த தோணி, தன்னுடைய வித்தியாசமான விக்கெட் கீப்பிங் ஸ்டைலாலும் பிரபலமான அதிரடி நாயகனாக வலம் வந்த தோனி ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியையும் மாற்றி இருக்கின்றார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தோனி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். தோனியில் தலைமையில் டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நம்பர் 1 ஐசிசி டெஸ்ட் அணியாக இந்தியா விளங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார்.
தோனி தன்னுடைய 40 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் குறுகிய போட்டியில் முதல் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையை தற்போது வரை தோனி வகித்து வருகிறார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர், இந்திய அணியை அதிக போட்டிகளில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய கேப்டன் என்ற பல சாதனைகளை தோனி படைத்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை பைனலில் தோனி அடித்த அந்த இறுதி சிக்ஸ் இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காதவையாக இருக்கிறது. ஒரு வீரர் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கழித்து தான் இந்த கௌரவம் கிடைப்பதற்கான முதல் தகுதி ஆகும். இந்த தகுதியை தோனி தற்போது எட்டிய நிலையில் ஐசிசி இந்த கௌரவத்தை அவருக்கு வழங்க இருக்கிறது . சச்சின், கவாஸ்கர், கபில் தேவ், ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே, சேவாக், பிசன் சிங் பேடி, வினோத் மான்கட் உள்ளிட்ட வீரர்களுக்கு பிறகு இந்த கௌரவத்தை பெரும் ஒன்பதாவது இந்திய வீரர் என்ற பெயர் கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications