Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: தோனி இருந்திருந்தா அந்த 10 ரன் அடிச்சு ஜெயித்து இருக்கலாம்.. கதறும் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி இதுவரை விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டுள்ளது. தோனி எப்போது மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம், தோனி மீண்டும் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பை விண்ணைத் தொட வைத்தது. ஆனால், போட்டி நாளன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஒரு மாறுபட்ட காட்சி அரங்கேறியது. தோனி, தீவிரப் பயிற்சியில் ஈடுபடாமல் தனது சக வீரர்களுடன் 'புட்-வாலிபால்' விளையாடுவதிலும், லேசான உடற்பயிற்சிகளைச் செய்வதிலும் மட்டுமே ஆர்வம் காட்டினார்.

MS Dhoni Injury update He again Misses Out the match for CSK Against SRH Due to Injury

தோனியின் வருகை குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேட்டபோது, "அவர் தனது காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். முன்னேற்றம் நன்றாக உள்ளது" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை என்பதே உண்மை. இதற்கிடையே, டாஸ் போடப்பட்ட போது தோனியின் பெயர் விளையாடும் வீரர்கள் பட்டியலிலோ அல்லது இம்பாக்ட் பிளேயர் பட்டியலிலோ இடம் பெறவில்லை. இது மைதானத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

தோனி இல்லாததால் இக்கட்டான சூழலில் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் 'பினிஷர்' இல்லாமல் சிஎஸ்கே அணி தவித்தது. 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணிக்கு, கடைசி ஓவர்களில் அனுபவம் வாய்ந்த ஒரு பேட்டர் தேவைப்பட்டார். அதிரடி வீரர் டிவால்ட் பிரெவிஸ் டக் அவுட் ஆனதும், இளம் வீரர் மத்ரே காயத்தால் தடுமாறியதும் சென்னைக்குச் சரிவை ஏற்படுத்தியது. இறுதியில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்களில் வெற்றியைப் பறிகொடுத்தது சிஎஸ்கே.

தோனி மட்டும் இருந்திருந்தால் அந்த 10 ரன்கள் ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்காது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். தற்போது 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, அடுத்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியிலாவது தோனி மீண்டும் 'மஞ்சள்' உடையில் களம் காண்பாரா அல்லது ரசிகர்களின் காத்திருப்பு இன்னும் நீடிக்குமா என்பதே தற்போதைய பெரிய கேள்விக்குறியாகும். ஒருபுறம் தோல்வி, மறுபுறம் 'தல' இல்லாத கவலை என சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர்.

Story first published: Sunday, April 19, 2026, 9:35 [IST]
Other articles published on Apr 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+