என்ன அநியாயம்? இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட தோனி.. ரசிகர்கள் அதிர்ச்சி
Recommended Video

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் தோனி இடம் பெறவில்லை.
இதனால், தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனி சமீப காலங்களில் ரன் குவிப்பதில் சுணக்கம் காட்டி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தற்போது ஆடி வரும் தோனி, டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அவருக்கு அளிக்கும் எச்சரிக்கை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அக்டோபர் 26 அன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்கள் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ரோஹித், கோலி கேப்டன்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கோலி கேப்டனாகவும் செயல்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கோலி ஓய்வில் இருப்பார்.

தோனிக்கு ஓய்வா? நீக்கமா?
இந்த இரண்டு டி20 தொடர்களிலும் தோனி இல்லாததை அடுத்து, அவருக்கு ஓய்வு அளிக்கவில்லை, அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. 2007 டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்தது அப்போதைய இந்திய கேப்டன் தோனி தான். இதுவரை இந்தியா ஒரு முறை மட்டுமே டி20 உலகக்கோப்பை வென்றுள்ளது.

தோனிக்கு இனி வாய்ப்பு கிடைக்குமா?
தோனி இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடி 1487 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.17, ஸ்ட்ரைக்ரேட் 127 ஆகும். தோனிக்கு இனிமேல் டி20 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாகி உள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிலாவது தோனியின் பெயர் இடம் பெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்திய டி20 அணி - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ், ஷாபாஸ் நதீம்

இந்திய டி20 அணி - ஆஸ்திரேலியா டி20 தொடர்
ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ்


Click it and Unblock the Notifications