தோனிதான் முதல் இடம்.. அப்புறம் ராகுல்.. அறிமுக டி20 போட்டியில் டக் அவுட்டான 4 இந்திய நட்சத்திரங்கள்!
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அறிமுகப் போட்டியை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றவே அனைத்து வீரர்களும் விரும்புவார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டின் நான்கு நட்சத்திர வீரர்கள், தங்களது முதல் சர்வதேச டி20 போட்டியில் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்துள்ளனர். இதில் முதல் இடத்தில் இருப்பதே முன்னாள் கேப்டன் தோனி தான். அந்த 4 முன்னணி வீரர்கள் இதோ:
தோனி: இந்திய அணிக்கு முதல் டி20 உலகக்கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் தோனி, தனது அறிமுக டி20 போட்டியில் டக் அவுட்டானார். 2006-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய தோனி, 2 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார். அதுவே இந்திய அணியின் முதல் டி20 ஆட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல்: டி20 அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள கே.எல்.ராகுலின் தொடக்கமும் டக் அவுட்டில்தான் அமைந்தது. 2016-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கிய ராகுல், சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக் முறையில் வெளியேறினார்.
பிரித்வி ஷா: அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா, 2021-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் ஆடி இருந்தார். அந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி டக் அவுட்டானார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டிக்குப் பிறகு அவருக்கு இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
அபிஷேக் சர்மா: தற்போது தனது அதிரடி பேட்டிங்கால் சர்வதேச பந்துவீச்சாளர்களை புரட்டிப் போட்டு வரும் அபிஷேக் சர்மாவும் அறிமுகப் போட்டியில் டக் அவுட்டானவர்தான். 2024-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா, ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினார்.
முதல் போட்டியில் பூஜ்ஜியத்தில் வெளியேறினாலும், இந்த நால்வரில் பிரித்வி ஷா தவிர்த்து தோனி, ராகுல் மற்றும் அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் பல சாதனைகளை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

