MS Dhoni: சிஎஸ்கே-வை விட்டு வெளியேறிய தோனி.. வீட்டுக்கு சென்றார்.. அணி நிர்வாகத்துடன் மோதலா?
சென்னை: 2026 ஐபிஎல் தொடர் இன்னும் முடிவடையாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறிய தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சிக்குத் திரும்பியது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வரும் தோனி - சிஎஸ்கே இடையிலான உறவில் விரிசல் விழுந்துவிட்டதோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் இருந்தே காயம் காரணமாகத் தோனி ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. பெரும்பாலான போட்டிகளின் போது அவர் மைதானத்திற்கு வராமல் ஹோட்டல் அறையிலேயே தங்கியிருந்தார். அவருக்குக் காலில் தசைப்பிடிப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. இந்நிலையில், சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட அகமதாபாத் சென்றுள்ள நிலையில், தோனி அவர்களுடன் செல்லாமல் ராஞ்சிக்குத் திரும்பியுள்ளார்.

நிர்வாகத்துடன் விரிசலா?
சமீபத்தில் அஸ்வின் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் இப்போது நிர்வாகப் பொறுப்பில் இல்லாததைச் சுட்டிக்காட்டியிருந்தார். சீனிவாசன் இருந்திருந்தால் தோனிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என்றும், சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களைச் சந்தித்த போது தோனியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. மேலும், புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகத் தோனி ஒதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் அணியுடன் பயணிக்காதது பல கேள்விகளை எழுப்பியது.
மீண்டும் திரும்புவாரா?
தோனி கடைசி போட்டியில் ஆடுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, "தோனிக்குக் கட்டைவிரலில் காயம் உள்ளது. அவர் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். ஒருவேளை குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டுமே தோனி மீண்டும் அணியுடன் இணைவார்" என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் கவலை
தோனி சேப்பாக்கத்தில் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டிய இக்கட்டான நிலையில், தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி எப்படிச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினால், தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவதைப் பார்ப்பது இனி சாத்தியமில்லாமல் போகலாம் என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் இந்த விரிசல் குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
