சென்னை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்துள்ளார். இன்று சிஎஸ்கே அணி, லக்னோ அணியை எதிர்கொள்கிறது. தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 235 போட்டிகளில் விளையாடி 4992 ரன்கள் எடுத்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் தோனி, மகத்தான மைல்கல்லை எட்ட வெறும் 8 ரன்களே தேவைப்படுகிறது. அப்படி செய்தால், ஐபிஎல் கிரிக்கெட் 5 ஆயிரம் ரன்களை அடித்த 7வது வீரர் என்ற சாதனையை தோனி எட்ட உள்ளார். மேலும் இந்த மைல்கல்லை எட்டிய வயதான வீரர் என்ற பெருமையும் தோனியை சேரும். தோனி இந்த பட்டியலில் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ் போன்றோர் இந்த ரெக்கார்டை தொட்டு உள்ளனர்.

இதே போன்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலும் ஒரு மகத்தான சாதனையை எட்ட உள்ளார். கேஎல் ராகுல் எப்போதுமே சிக்சர்களை எந்த கடின முயற்சியும் தேவைப்படாமல் அசால்ட்டாக அடிப்பார். இன்றைய ஆட்டத்திலோ, மொத்தமாக இந்த தொடரிலோ அவர் 11 சிக்சர்கள் அடித்தால் 300 சிக்சர்களை டி20 கிரிக்கெட்டில் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதே போன்று கேஎல் ராகுல், 103 ரன்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற மைல்கல்லை அடைவார், ராகுல் எப்போதுமே சிஎஸ்கேவுக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் 65 ரன்கள் அடித்தால், சென்னை அணிக்கு எதிராக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை பெறுவார். ராகுல், முதல் ஆட்டத்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.