என் இதயமே உடைந்து போனது.. தோற்று விட்டோம்.. ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.. மனம் திறந்த தோனி
மும்பை: 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை அரை இறுதியுடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தது. தோனி அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.
அப்போது அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய போது அழுதபடியே சென்றார். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் அந்த போட்டி குறித்து தோனி மனம் திறந்து பேசவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அவரிடம் 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தோல்வி குறித்து ஒரு பார்வையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு தோனி மனம் திறந்து பதில் அளித்தார். தோனி இது குறித்து பேசுகையில், "அந்த தோல்வி மிகவும் கடினமானது. அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை என எனக்கு தெரியும். எனவே, நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால். அது இதயமே உடைந்து போன தருணமாக இருந்தது. நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொண்டோம். அதை கடந்து செல்ல முயற்சி செய்தோம்." என்றார்.
மேலும், "அந்த தோல்வியில் இருந்து வெளியே வர சில காலம் ஆகும். உலக கோப்பைக்கு பின்பு ஒவ்வொருவருக்கும் அதற்கான நேரம் கிடைக்கும். நான் அதன் பின்பு சர்வதேச கிரிக்கெட் விளையாடாததால் எனக்கு அதிக நேரம் இருந்தது. அது இதயம் நொறுங்கிப் போன ஒரு தருணம் தான். அதே சமயம் நாம் அதில் இருந்து வெளியே வந்து தான் ஆக வேண்டும். நீங்கள் அதில் வெற்றி பெறவில்லை. அதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும்." என்றார் தோனி.


Click it and Unblock the Notifications