புனே அணியில் டோணி, அஸ்வின், ரஹானே...ராஜ்கோட்டுக்கு ரெய்னா, மெக்கல்லம், ஜடேஜா
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த பல வருடமாக வலம் வந்த எம்.எஸ்.டோணி அடுத்த இரண்டு வருடங்களுக்கு புனே அணியின் வீராக ஆடப் போகிறார். இன்று நடந்த ஐபிஎல் வீரர்கள் தேர்வின்போது டோணியை புனே அணி ரூ. 12.5 கோடி கொடுத்து வாங்கியது.
அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானேவையும் புனே அணி விலைக்கு வாங்கியது. மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் ராஜ்கோட் அணி வாங்கியது.
மும்பையில் இன்று நடந்த வீரர்களை வாங்கும் நிகழ்ச்சியின்போது இரு புதிய அணிகளும் தலா 5 வீரர்களைத் தேர்வு செய்து கொண்டன. இவர்களின் வசதிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு தடை செய்யப்பட்ட அணிகளையம் சேர்ந்த 50 வீரர்களின் பட்டியலை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

முதல் முறையாக மாறிய டோணி
9வது மற்றும் 10வது சீசனில் டோணி புனே அணிக்காக ஆடுவார். இதுவரை நடந்துள்ள 8 சீசனிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தார். 2 முறை கோப்பையையும் வென்றது சென்னை என்பது நினைவிருக்கலாம்.

இனி புனே கேப்டன்
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக வலம் வந்த டோணி இனி புனே அணியின் கேப்டாக வலம் வரப் போகிறார். இது அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் கூட புதிய அனுபவமாக இருக்கும்.

முதல் தேர்வாக டோணி
இன்றைய வீரர்கள் தேர்வின்போது இரு அணிகளும் தலா 5 வீரர்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டன. இதில் முதலில் வீரர்களைத் தேர்வு செய்ய புனே அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அது டோணியை முதல் தேர்வாக தூக்கி விட்டது.

அஸ்வின்
புனே அணியில் டோணி, அஜிங்கியா ரஹானே, ஆர். அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ராஜஸ்தான் அணியின் ஸ்டீவ் ஸ்மித், சென்னையின் பாப் டூ பிளஸிஸ் ஆகியோரையும் புனே வாங்கியுள்ளது.

ரெய்னா - ஜடேஜா
அதேபோல ராஜ்கோட் அணியில் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிரன்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோரை வாங்கியுள்ளது. கடைசி வீரராக சென்னயைின் வேயன் பிராவோவை வாங்கியது ராஜ்கோட்.

டோணிக்கு சம்பளம் ரூ. 12.5 கோடி
முதலில் தேர்வு செய்யப்படும் வீரருக்கு ரூ. 12.5 கோடி சம்பளமாகும். 2வது வீரருக்கு ரூ. 9 கோடி, 3வது வீரருக்கு ரூ. 7.5 கோடி, 4வது வீரருக்கு ரூ. 5.5 கோடி, 5வது வீரருக்கு ரூ. 4 கோடி என மொத்தம் ரூ. 39 கோடியை செலவிடலாம்


Click it and Unblock the Notifications