“என்னுடைய ஆட்டமும் முடிந்தது”.. ரெய்னா சொன்னதை கேட்டு உறைந்து போன தோனி.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் 2020, ஆகஸ்ட் 15. அன்று மாலை 7:29 மணிக்கு தோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். தோனி ஓய்வு பெற்ற அதே நாளில், தானும் ஓய்வு முடிவை எடுத்ததற்கான பின்னணி குறித்து சுரேஷ் ரெய்னா இப்போது மனம் திறந்துள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான நேர்காணலில் ரெய்னா இது குறித்துப் பேசினார். தனது ஓய்வு முடிவை தோனியிடம் சொன்னபோது அவர் எப்படி அதிர்ச்சியடைந்தார் என்பதை ரெய்னா விளக்கினார். "நாங்கள் அனைவரும் சிஎஸ்கே ஓய்வறையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. தோனி தனது ஓய்வை அறிவித்த பிறகு, நான் அவரிடம் சென்று, 'என்னுடைய ஆட்டமும் முடிந்தது' என்றேன். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தோனி, 'என்ன காரியம் பண்ணியிருக்க நீ?' என்று கேட்டார்" என ரெய்னா கூறினார்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருந்தது. அதற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயோ பபுளில் பயிற்சி பெற்று வந்தனர். தோனியுடனான நெருக்கம் குறித்துப் பேசிய ரெய்னா, "என்னுடைய பேட்டிங் வரிசைக்காக தோனி தனது பேட்டிங் இடத்தையே தியாகம் செய்தார். கங்குலி கேப்டனாக இருந்தபோது தோனி முன்வரிசையில் பேட்டிங் செய்தார். ஆனால், கேப்டனான பிறகு யுவராஜ் சிங் மற்றும் எனக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, அவர் பின்வரிசைக்குச் சென்றார்" என்று நெகிழ்ந்து கூறினார்.
மேலும், "கேப்டன் என் மீது வைத்த நம்பிக்கையே, எனக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. அவருக்காக மைதானத்தில் பந்துவீச்சு, பீல்டிங் என எனது முழு திறமையையும் காட்டினேன். பணத்தை விட பெரிய மனம் தான் நட்புக்கு முக்கியம். தோனியுடன் இருக்கும் இந்த நட்பு என்றென்றும் தொடரும்" என்றும் ரெய்னா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications

