மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற நாயகனாக விளங்கும் மகேந்திர சிங் தோனி தற்போது 42 வயதிலும் இன்னும் தனது பேட்டிங் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தோனியின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் அவருடைய மனைவி ஷாக்சி தான். வெறும் கிரிக்கெட் வீரராக இருந்த தோனியை தற்போது தொழிலதிபராகவும் ஷாக்சி மாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் தோனி ஷாக்சி லவ் ஸ்டோரி எப்போது தொடங்கியது என்று கேட்டால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள். தோனியும் ஷாக்சியும் ஒரே பள்ளியில் தான் படித்தார்கள். ஷாக்சி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தோனி பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார். மேலும் தோனியின் தந்தையும் ஷாக்சியின் தந்தையும் குடும்ப நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
சிறுவயதிலே ஷாக்சி தோனிக்கு நன்றாகத் தெரியுமாம். ஒரு கட்டத்திற்கு மேல் ஷாக்சியின் குடும்பம் டெஹ்ராடூன்க்கு குடியேறி சென்று விட்டார்கள். இதனால் இரு குடும்பத்தினருக்கும் டச் விட்டுப் போய்விட்டது. இந்த நிலையில் தோனி ஸ்டார் வீரராக உருவெடுத்து கேப்டன் பதவியும் ஏற்ற நிலையில் கொல்கத்தாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார்.
அப்போது தோனி தங்கி இருந்த ஹோட்டலில் ஷாக்சி இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார். ஷாக்சிக்கு கிரிக்கெட் குறித்து அவ்வளவாக அறிவு இல்லை. இதனால் தோனியை அடையாளம் தெரியாத ஷாக்சி, அவரை சாதாரண வாடிக்கையாளர் போல் நடத்தியிருக்கிறார். பிறகு இது தோனி தான் என்று தெரிந்தவுடன் சக ஊழியர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க சொன்னார்களாம்.
அப்போதுதான் தோனிக்கும் ஷாக்சிக்கும் நட்பு ஏற்பட்டதாம் மேலும் ஷாக்சியை அடையாளம் கண்டு கொண்ட தோனி, அவரை டேட்டிங்கிற்கு அழைத்திருக்கிறார். முதலில் பயந்த ஷாக்சி பிறகு தோனியுடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஏற்கனவே இவர்கள் குடும்ப நண்பர்கள் என்பதால் திருமணமும் எந்த தடையும் இன்றி 2010 ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. அன்று முதல் தோனி ஷாக்சி ஜோடி லவ் பேர்ட்ஸாக சுற்றி வருகிறார்கள்.