
சிறப்பான கேப்டன்
கடந்த ஒரு ஆண்டுகாலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வரும் செப்டம்பர் மாதம் யூஏஇயில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளார். கடந்த 2007 முதல் 2016 வரை கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்திலும் 2008 முதல் 2014 வரையில் டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு சிறப்பான சாதனைகளை மேற்கொண்ட தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கவுதம் கம்பீர் பேச்சு
இந்நிலையில் தோனி விரும்பும்வரை கிரிக்கெட்டை என்ஜாய் செய்யும்வரை அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடலாம் என்று முன்னாள் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்
தன்னுடைய 39வது பிறந்த நாளை கடந்த 7ம் தேதி தோனி கொண்டாடி மகிழ்ந்த நிலையில், வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். தோனி பிட்டாகவும் நல்ல பார்மிலும் உள்ளவரையில் பந்தை அடித்து ஆடும்வரையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவது சொந்த முடிவு
யாரும் எந்த வீரரையும் ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள கம்பீர், தோனி போன்ற சிறந்த வீரருக்கு பல தரப்பிலிருந்தும் அவருடைய வயது மற்றும் திறமையை கொண்டு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தோனி ஓய்வு பெறுவது என்பது அவருடைய சொந்த முடிவு என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மனநிலை மாறும்
ஐபிஎல் போட்டிகள் எந்த இடத்தில் நடந்தாலும், எந்த அணி வெற்றி பெற்றாலும், எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தாலும் அது நடைபெறுவதன்மூலம் நாட்டின் மனநிலை சந்தோஷமாக மாறும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காட்டிலும், தற்போது நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் போட்டிகள் மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











