சிஎஸ்கே-வை காப்பாற்ற வரும் தோனி.. அடுத்த கோச்சை தேர்வு செய்யப் போவது இவர்தான்.. ரசிகர்கள் குஷி
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிஎஸ்கே-வின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்வதில் சிஎஸ்கே நிர்வாகம் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தோனி அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை தனது கைகளில் எடுத்துள்ளார் என சிஎஸ்கே வட்டாரம் கூறுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி அதன்பின் தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்றது. 2024இல் 5வது இடம், 2025இல் கடைசி இடம், 2026 சீசனில் 8வது இடம் என சிஎஸ்கே படுதோல்விகளைச் சந்தித்தது. இதனால் அணியில் அதிரடி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம், தற்போது பயிற்சியாளர் பிளெமிங்கை நீக்கியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சகோதர அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தைப் பிடித்தது. அந்த அணிக்கும் பிளெமிங் தான் பயிற்சியாளர். அந்த தொடரிலும் தோற்ற பின் நடத்தப்பட்ட தீவிர ஆய்வுக்குப் பிறகே, பிளெமிங்குடனான 17 ஆண்டுகால பந்தத்தை முடிக்க சிஎஸ்கே முடிவு செய்தது. தற்போது புதிய பயிற்சியாளருக்கான தேடல் தொடங்கியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் தேர்வு மற்றும் திட்டங்களை வடிவமைக்கப் போவது தோனி தான். சிஎஸ்கே அணியில் உள்நாட்டு வீரர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதால், இந்த முறை இந்திய பயிற்சியாளரை நியமிக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது லண்டனில் இருக்கும் தோனி, அங்கு நடைபெறும் 'தி ஹண்ட்ரெட்' தொடரின் போது புதிய பயிற்சியாளருக்கான சில முக்கிய நபர்களை நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.
தோனியே நேரடியாகக் களமிறங்கி புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய உள்ளதால், சிஎஸ்கே மீண்டும் தனது விஸ்வரூப ஆட்டத்திற்குத் திரும்பும் என்று 'தல' ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு இல்லை. எனவே, தோனி வேறு ஒரு பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications