அடிலெய்டில் மட்டும் ஏதோ ஒன்று என்னை ஈர்க்கிறது.. அமானுஷ்யமாக சொல்லும் கோஹ்லி
அடிலெய்டு: இந்த மைதானத்தில் ஆடும்போதெல்லாம் மனதில் ஒரு அமைதி உட்கார்ந்து கொள்கிறது, சிறப்பாக ஆட முடிகிறது என்று அடிலெய்டு ஓவல் மைதானம் குறித்து மனம் திறந்துள்ளார் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி.
அடிலெய்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 90 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் நின்றார் விராட் கோஹ்லி. இதனால் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களை குவிக்க முடிந்தது.
இதன்பிறகு இந்திய ஸ்பின்னர்களும் கை கொடுக்க இந்திய அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது.

அதிகபட்ச ரன்
விராட் கோஹ்லி அடித்த 90 ரன்கள் அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது சிறப்பு.

ஆஸ்தான மைதானம்
அடிலெய்டு ஓவல் மைதானம், கோஹ்லியின் ஆஸ்தான மைதானமாக மாறிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. 2012ம் வருடத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கு சதம் விளாசியிருந்தார் கோஹ்லி. 2014ம் ஆண்டில், கேப்டன் என்ற முறையில் களமிறங்கிய கோஹ்லி, ஒரே டெஸ்ட் போட்டியில் 2 செஞ்சுரிகளை விளாசினார்.

சதம் விளாசல்
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோஹ்லி பிற ஆட்டங்களில் சிறப்பாக ஆடவில்லை என்றபோதிலும், அடிலெய்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியிருந்தார்.

ஈர்க்கிறதே
அடிலெய்டு ராசி குறித்து கோஹ்லி கூறுகையில், இந்த மைதானத்திற்குள் நான் நுழையும்போதெல்லாம், ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை கட்டிப்போடுகிறது.

ரசிகர்கள் காரணமோ..
அடிலெய்டு மைதானத்தில் ஆடும்போது எனது மனது இதமாக உணரப்படுகிறது., முழு திறமையோடு என்னால் ஆட முடிகிறது. அதிகப்படியான ரசிகர்கள் கொள்ளளவு கொண்ட மைதானமாக இது இருப்பதும் காரணமாக இருக்கலாம். ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும்போது இன்னும் சிறப்பாக ஆட முடிகிறது என்றார்.

பெயர் வச்சிருவாங்கப்பு
கேப்டன் டோணி கூறுகையில், அடிலெய்டு மைதானத்தில் கோஹ்லி பெயரில் பார்வையாளர் மாடமே அமைத்துவிடுவார்கள் என நினைக்கிறேன். கோஹ்லி ஓய்வு பெறும் வயதில், ஆஸ்திரேலியாவின் பல மைதானங்களில் அவர் பெயரில் பார்வையாளர் மாடங்கள் அமைந்திருக்கும் எதிர்பார்க்கிறேன் என்றார்.
சச்சின் பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர் மாடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications