தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல்இல் விளையாடுவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் முக்கிய தகவல்
அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்த மர்மம் நீடித்து வரும் நிலையில், அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் இது தொடர்பாக மிக முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
கடைசியாக 2023-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, அதன்பின் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இந்தத் தோல்விக்குப்பின் பேசிய எரிக் சைமன்ஸ், தோனியின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தார்.

வலைப்பயிற்சியில் அதிரடி
இந்த சீசன் முழுவதும் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இது குறித்துப் பேசிய சைமன்ஸ், "தோனி வலைப்பயிற்சியில் பந்துகளை எதிர்கொண்ட விதம் பிரமிக்க வைத்தது. நான் பார்த்ததிலேயே இப்போதும் அவர் மிகச்சிறப்பாகப் பந்துகளை விளாசுகிறார். ஆனால், அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் மைதானத்தில் ஓட முடியாத சூழல் இருந்தது. அதுவே அவர் இந்த சீசனில் விளையாட முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம். ஓட முடிந்திருந்தால் அவர் நிச்சயம் களம் இறங்கியிருப்பார்" என்றார்.
தோனியின் முடிவு
தோனி அடுத்த சீசனில் திரும்புவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தோனி எப்போது விளையாட வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வார். அவர் எப்போதும் சுயநலமாக யோசிக்க மாட்டார். அவரால் அணிக்கு முழுமையாகப் பங்களிக்க முடியும் என்று அவர் நம்பினால் மட்டுமே அடுத்த சீசனில் களம் இறங்குவார். அணிக்குத் தான் ஒரு சுமையாக இருப்போம் என்று அவர் நினைத்தால், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் விலகிவிடுவார். அவர் ஒரு சிறந்த அணி வீரர். அவர் அணியுடன் இருப்பது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம்" என்றார்.
இளம் வீரர்களின் வளர்ச்சி
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய சாதகமான விஷயம் இளம் வீரர்களின் வளர்ச்சி என்று சைமன்ஸ் சுட்டிக்காட்டினார். குறிப்பாக கார்த்திக் தியாகி மற்றும் உர்வில் படேல் போன்ற வீரர்கள் மிகச்சிறப்பாக முன்னேறியுள்ளதாக அவர் தெரிவித்தார். தோல்வியடைந்த போதிலும், அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இந்த சீசன் தங்களுக்கு ஒரு தெளிவான புரிதலைக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
