டோணிக்கும், யுவராஜ் சிங்குக்கும் ஏதாச்சும் பெரிய சண்டையா? #ywcfashion
டெல்லி: டோணிக்கும், யுவராஜ் சிங்குக்கும் ஏதாவது பெரிய சண்டையா.. பலரும் முனுமுனுக்கும் கேள்வி இது. யுவராஜ் சிங் நேற்று தனது அறக்கட்டளைக்கு நிதி சேகரிக்க நடத்திய பேஷன் பொருட்கள் விற்பனை தொடக்க விழாவில் டோணி கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதிலும், இந்த சந்தேகத்தை அதிகரிப்பது போல அமைந்து விட்டது.
யுவராஜ் சிங் தனது அறக்கட்டளைக்கு நிதி சேகரிக்க ஒய்டபிள்யூசி பேஷன் என்ற பெயரில் ஆடைகளை வடிவமைத்து விற்பனைக்கு விட்டுள்ளார். டிசைனர்கள் நிகில் மற்றும் ஷாந்தனுவுடன் இணைந்து இந்த ஆடைகளை அவர் விற்பனைக்கு விட்டுள்ளார்.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை தனது புற்றுநோய் விழிப்புணர்வு அறக்கட்டளையின் பணிகளுக்கு அவர் பயன்படுத்தவுள்ளார். இந்த ஆடைகள் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா டெல்லியில் நேற்று நடந்தது.

யாரெல்லாம் வந்தாங்க?
விழாவில் வீரேந்திர ஷேவாக், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, முகம்மது கைப், சுஷில் குமார், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், அர்ஜூன் ராம்பால், பர்ஹான் அக்தார், பரா கான், கிறிஸ் கெய்ல், வேயன் பிராவோ உளளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டோணி மிஸ்ஸிங்
ஆனால் முக்கியமான நபராக கேப்டன் டோணி வரவில்லை. யுவராஜ் சிங்கின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர் டோணி. ஆனால் சமீப ஆண்டுகளாக இவர்களின் நட்பு கசந்து போக ஆரம்பித்து விட்டதாக பரவலாக பேச்சு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், யுவராஜ் சிங்கின் தந்தைதான். அவர் டோணியை மிகக் கடுமையாக விமர்சிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்.

"தல" ரொம்ப பிசி போல!
நேற்றைய நிகழ்ச்சிக்கு டோணி வராமல் போனதற்கு இதுதான் காரணமா என்று தெரியவில்லை. ஆனால் வந்த எல்லோருமே "கியா ஜி.. டோணி நஹி ஆத்தா?" என்று கேட்கத் தவறவில்லை. இதற்கு வழக்கம் போல யுவராஜ் சிங் டிப்ளமேட்டிக்காக பதிலளித்து சமாளித்தார். டோணி ரொம்ப பிசியாக இருக்கிறார் போல என்பதுதான் யுவராஜின் பதில்.

போனையே எடுக்கலை
யுவராஜ் மேலும் கூறுகையில், நான் பலமுறை போன் செய்து பார்த்தேன். எந்த போனையும் அவர் எடுக்கவில்லை. ரொம்ப பிசியாக இருக்கிறார் போல. அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 தொடருக்காக பிசியாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன். எனக்கு அவர் உதவுவார் என்று நம்புகிறேன் என்று கூறினார் யுவராஜ் சிங்.

இதையேதான் அவரும் அப்ப சொன்னார்
டோணி குறித்து யுவராஜ் சிங் இப்போது சொன்னதைப் போலத்தான் அன்று விவிஎஸ் லட்சுமணும் சொன்னார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தபோது, ஓய்வு குறித்து விவாதிக்க டோணியைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அவரை லைனில் பிடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் லட்சுமண்.
ஒரு வேளை டோணியின் "போன் வயரில்" ஏதாவது பிரச்சினையா இருக்குமோ...?!?


Click it and Unblock the Notifications