லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக வெளியிடப்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்திய அணியில் ஏற்கனவே ஏழு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்திருக்கும் நிலையில், அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் பிளேயிங் லெவனில் விளையாட முடியும் என்ற நிலை உள்ளது. இந்த சூழலில், எட்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷித் ராணா இந்தியா 'ஏ' அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடியிருந்தார். அதில் ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், மற்றபடி அவரது பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது விமர்சிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்படி என்றால் அவருக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
அதனால் அவர்கள் இருவருக்குமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அவர்கள் இருவரில் ஒருவரையாவது அணியில் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கும் அவர்கள் இருவருக்கும் ஹர்ஷித் ராணாவின் வரவால் வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மனம் உடைந்த முகேஷ் குமார் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "கர்மா அதன் நேரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கர்மா யாரையும் மன்னிக்காது, நிச்சயம் திருப்பி அடிக்கும்" எனக் கூறியுள்ளார். இது ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் வெளியிடப்பட்ட பதிவு என ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்வதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் ஆர்வமாக இருந்தார் என்ற ஒரு தகவலும் உள்ளது. அவர்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்படும் முக்கிய காரணமாகவும் இருந்தார். எனவே, இந்தப் பதிவு கௌதம் கம்பீர் அல்லது ஹர்ஷித் ராணா இந்திய அணியில் தேர்வு செய்யப்பட காரணமாக இருந்தவர்களைப் பற்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.