42வது முறையாக சாம்பியன்.. சாதித்துக் காட்டிய மும்பை.. போராடி தோற்ற விதர்பா அணி.. ரஹானே அபாரம்!
மும்பை : விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷர்துல் தாக்கூரின் அபார அரைசதம் காரணமாக 224 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த குல்கர்னி, முலானி மற்றும் தனுஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 2வது இன்னிங்ஸில் 418 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய முஷீர் கான் 136 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்காளும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக விதர்பா அணி வெற்றிபெறுவதற்கு 538 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 10 ரன்களுடன் களத்தில் இருந்தது. பின்னர் 4வது நாள் ஆட்டத்தில் விதர்பா அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால் ஆட்டம் 5வது நாளிற்கு நகர்ந்தது. 3 வகையிலான முடிவுக்கும் வாய்ப்பிருந்ததால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அக்ஷய் வத்கர் - ஹர்ஷ் துபே இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 5வது நாளின் உணவு இடைவேளை வரை இருவரும் விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். இதனால் விதர்பா அணியின் ஸ்கோர் 333 ரன்களாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அக்ஷய் வத்கர் சதம் விளாசிய நிலையில், 102 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து அரைசதம் அடித்து களத்தில் இருந்த ஹர்ஷ் துபேவும் 65 ரன்களில் வெளியேற, அதன்பின் ஆதித்யா 3 ரன்களிலும், யாஷ் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, 42வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று மும்பை அணி சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications