மூளைக்கார முரளி விஜய்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெற சரியான வழியைப் பிடித்தார்
லண்டன் : இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இருந்த முரளி விஜய், இந்திய டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்பட்டதை அடுத்து இங்கிலாந்து உள்ளூர் கவுன்டி அணியான எசக்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இந்த தகவலை பிசிசிஐ மற்றும் எசக்ஸ் அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளன. தற்போது 2018 சீசன் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இந்த ஆண்டின் மீதமுள்ள போட்டிகளில் முரளி விஜய் எசக்ஸ் அணியில் பங்கேற்ப்பார்.
இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன், பயிற்சி போட்டியில் எசக்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போது அதில் முதல் இன்னிங்க்ஸில் முரளி விஜய் 53 ரன்கள் எடுத்தார். அதே அணியில் இப்போது சேர்ந்துள்ளார்.

முரளி விஜய் நீக்கம்
முரளி விஜய் இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக துவக்க வீரராக ஆடி வந்த நிலையில் இடை இடையே அவரது பேட்டிங் சொதப்பியதால் சராசரி கீழே விழுந்தது. மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சுத்தமாக ரன் எடுக்காததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் வாய்ப்பு?
இவர் சென்றதை அடுத்து தவான், ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கி வருகின்றனர். மேலும், இளம் வீரரான ப்ரித்வி ஷா அடுத்த துவக்க வீரர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், முரளி விஜயின் இந்திய அணி வாய்ப்பு கேள்விக் குறியாக இருக்கிறது.

மூளைக்காரர் முரளி விஜய்
இந்த நிலையில் முரளி விஜய், புத்திசாலித்தனமான முடிவாக எந்த இங்கிலாந்தில் தன் ஆட்டம் சரியில்லை என கூறினார்களோ, அங்கேயே ரன் குவித்து தன்னை நிரூபிக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது. எசக்ஸ் அணியில் இணைவது பற்றி கூறிய முரளி விஜய், "நான் இந்திய அணியோடு ஒரு மாதம் முன்பு வந்தேன். இங்கே உள்ள மக்கள் கூட்டம் மிகவும் அருமையானவர்கள் என்பதை பார்த்தேன். எசக்ஸ் அணிக்காக ஆடி, போட்டிகளை வெல்ல ஆவலாக உள்ளேன்" என கூறியுள்ளார்.

வாய்ப்பை பெறுவாரா?
இங்கிலாந்தில் இழந்த இந்திய அணி இடத்தை, எசக்ஸ் அணியில் ஆடி மீண்டும் பெறுவாரா? இளம் வீரர்கள் வரிசை கட்டி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், விஜய்யால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications