காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்
மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த முரளி விஜய் டெஸ்ட் அணியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்.
இரண்டு டெஸ்ட்களில் நன்றாக ஆடவில்லை என அவரை வெளியே அனுப்பிய தேர்வாளர்கள், அதன் பின் அவர் கவுன்டி அணியில் ரன் குவித்ததை கண்டு கொள்ளவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் முரளி விஜயை தேர்வு செய்யவில்லை. இதனால், வெறுப்பில் இருக்கிறார் முரளி விஜய். சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளில் தன் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சும்மா அணியை மாற்றுகிறார்கள்
முரளி விஜய் தான் அணியில் ஏன் சரியாக ஆடவில்லை என்பது பற்றி கூறினார். "தொடர்ந்து அணியில் ஆடவில்லை என்றால் யாருக்குமே சந்தேகம் வரும். சும்மா அணியை மாற்றிக் கொண்டே இருந்தால், நமக்கு இடம் கிடைக்குமா? என எண்ணங்கள் ஓடும். ஆனால், அணி நிர்வாகம் இதை வேறு மாதிரி பார்க்கிறது" என கூறினார்.

எந்த விளக்கமும் இல்லை
மேலும், தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் அணி தேர்வுக் குழு தலைவரோ, வேறு யாரோ தன்னிடம் பேசவில்லை என்றும், தான் ஏன் நீக்கப்பட்டேன் என எந்த விளக்கமும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், கருண் நாயரை அணியில் இருந்து நீக்கியதற்கு தேர்வுக் குழு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

கவுன்டியில் ரன் குவிப்பு
இப்போது முரளி விஜய், தன்னை நிரூபிக்க இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஆடி ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்துள்ளார். அப்போதும் அவரை இந்தியாவில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.

ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு?
அடுத்து நடக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலாவது தனக்கு இடம் கிடைக்குமா என காத்து இருக்கிறார் முரளி விஜய். ஆனால், மறுபுறம் ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், ராகுல் ஆகியோர் அணிவகுத்து நிற்பதால், முரளி விஜய்க்கு இனி டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.


Click it and Unblock the Notifications