“80 வயசு கிழவனை மாறி பாக்குறாங்க” முரளி விஜய்-ன் தற்போதைய நிலைமை.. பிசிசிஐ முடிவு குறித்து மனவேதனை
சென்னை: இந்திய அணியில் நீண்ட வருடங்களாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ள தமிழக வீரர் முரளி விஜய், 80 வயது கிழவன் போல என்னை பார்ப்பதாகவும், இனி பிசிசிஐ உடன் எந்தவித தொடர்பும் இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின் என பலரும் கலக்கி வருகின்றனர். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
ஆனால் இந்தியாவின் நட்சத்திர வீரராக ஒரு காலத்தில் இருந்த முரளி விஜய் மட்டும் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத வண்ணம் போயுள்ளது. சிறிது காலம் சரிவர ஆடவில்லை என புறகணிக்கப்பட்டவர் இன்று வரை கம்பேக் தரவில்லை.

முரளி விஜய் பயணம்
இந்திய ஓப்பனிங் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமான போட்டி என்றால் அது இந்தியா - இங்கிலாந்து 2014ம் ஆண்டு டெஸ்ட் தொடராகும். இது தான் விராட் கோலிக்கு மிகவும் மோசமான காலமாகும். ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுலிங்கில் படு மட்டமாக அவுட்டானார். ஆனால் ஓப்பனர் முரளி விஜய் அந்த போட்டியில் 1000 பந்துகளுக்கு மேல் சந்தித்து தூண் போல நின்றார். இதில் 40 சதவீதம் அடிக்காமல் விட்டிருந்தாலும் அது மறக்க முடியாத இன்னிங்ஸ் ஆகும்.

அடுத்தக்கட்ட திட்டம்
இப்படிப்பட்ட வீரர் கடைசியாக 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய அவர் 2019ம் ஆண்டு முதல் அதற்கும் முடிவு கட்டினார். எப்படியாவது வாய்ப்பு கிடைத்துவிடும் என நினைத்து டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கி வருகிறார். இந்நிலையில் தனது நிலைமை குறித்து மனவருத்தத்துடன் பேசியுள்ளார்.

வேதனை
பத்திரிகைக்கு ஒன்று பேட்டியளித்த அவர், பிசிசிஐ உடன் எனக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் முறிந்துவிட்டன. தற்போது அயல்நாடுகளில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருக்கிறேன். அங்கு சென்று உள்நாட்டு தொடர்களில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக ஏற்பாடுகளாக தான் உள்ளூர் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன்.

கிழவனாக பார்க்கின்றனர்
இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் இழிவாக பார்க்கப்படுகின்றனர். அதாவது 80 வயது ஆன முதியவர் சாலையில் நடப்பது போல நினைக்கின்றனர். இதனை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். என்னால் முடிந்தவரை நான் சிறப்பாக ஆட முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளே இங்கு எனக்கு தரப்படவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் தான் வாய்ப்பு தேடி அலைய வேண்டியுள்ளதாக முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications