வார்ணே சாதனையை முறியடித்தார் முரளீதரன்
கண்டி: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷான் வார்ணேவின் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் இன்று முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார்.உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் இருவரான ஷான் வார்ணேவுக்கும், முரளீதரனுக்கும் இடையே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்துவதில் சமீப ஆண்டுளாகவே கடும் மோதல் இருந்து வந்தது. இதில் முதலில் முரளீதரன் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். பின்னர் அதை வார்ணே முறியடித்தார்.
இறுதியில் 708 விக்கெட்டுக்களை வீழ்த்தி வார்ணே படைத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்தபோது, முரளி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சாதுரியமாக தடுத்து விட்டனர்.
இந்த நிலையில் முரளியின் சொந்த ஊரான கண்டியில், இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முரளி புதிய உலக சாதனை படைப்பார் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர்.
நேற்று நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய முரளி, வார்ணேவின் உலக சாதனையை சமண் செய்தார். இதனால் நேற்று முரளியின் உலக சாதனை முறியடிப்பு நடக்காமல் போனது.

இந்த நிலையில், இன்று தனது புதிய சாதனையைப் படைத்தார் முரளிதரன். இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தி வார்ணேவை பின்னுக்குத் தள்ளினார் முரளீதரன்.
முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர்.
தமிழரான முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர், இன்று முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.
அவரது தாயாரான நித்யா ராமமூர்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், முரளிதரனின் சாதனை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் சொந்த ஊரான கண்டியில் சாதனை படைக்கவிருப்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது. நான் அந்த சாதனையை நேரில் காண இலங்கை செல்கிறேன் என்றார்.
முரளியின் சாதனைப் பட்டியல்
டெஸ்ட் போட்டிகள் - 116
விக்கெட்டுகள் - 709
10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை.
5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை.
வார்ணே 145 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை முரளி 116வது டெஸ்ட்டிலேயே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முரளி முதலில் 2004ம் ஆண்டு மேற்கு இந்திய வீரர் கர்ட்னி வால்ஷ் நிகழ்த்தியிருந்த உலக சாதனையை (519 விக்கெட்டுகள்) வீழ்த்தி முதல் உலக சாதனையை நிகழ்த்தினார். அதன் பின்னர் அவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டதால் சில காலம் விளையாடாமல் இருந்தார். இதனால் வார்ணே முந்திக் கொண்டார்.
ஆஸ்திரேலியர்களால் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலியர்களை மட்டுமல்லாமல் உலக வீரர்களை தனது தூஸ்ரா பந்து வீச்சு முறையால் கதி கலங்க வைத்தவர் முரளி.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications