இஸ்லாமாபாத்:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது கிரிக்கெட் போட்டியே எனக்கு வெறுத்துப் போய்விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறி விட்டது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் வெளியேற்றம் எனக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்து விட்டது. உலகக் கோப்பைப் போட்டிகளைப்பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. எனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போதுதான் நான் கிரிக்கெட்டை வெறுத்துள்ளேன்.
பாகிஸ்தான் அணியின் ஆட்டத் திறன் குறித்து ஆராய வேண்டும். அணியின் தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் திடீர் மரணம் எதிர்பாராதது, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்தபேட்ஸ்மேன், நல்ல மனிதர், கடின உழைப்பாளி.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக தீவிரமாக பாடுபட்டவர், கடுமையாக உழைத்தவர். மனதில் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக பழகாதவர்.பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை பாகிஸ்தான் மக்கள் என்றென்றும் நினைவு கூருவார்கள் என்றார் முஷாரப்.