யாருப்பா நீ? சச்சின் ரெக்கார்டை உடைச்சுட்ட.. முஷீர் கான் ஆட்டத்தால் கிலியில் சுப்மன் கில்
பெங்களூரு: துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்தியா பி அணியில் இடம் பெற்று இருந்த இளம் வீரர் முஷீர் கான் முதல் நாள் முடிவில் சதம் அடித்து இருந்தார். தொடர்ந்து இரண்டாம் நாள் அன்று பேட்டிங் செய்த அவர் 181 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார். அதன் மூலம், அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். முஷீர் கான், கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஷீர் கானின் சதம் சுப்மன் கில்லுக்கு எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் சராசரிக்கும் கீழாகவே ரன் குவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்து தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் அவர் 25 ரன்கள் மட்டுமே எடுத்து பவுல்ட் அவுட் ஆனார். சுப்மன் கில் ஆட்டம் இழந்த விதமும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதே போட்டியில் முஷீர் கான் தனது அணி 7 விக்கெட் இழந்த நிலையில் கரை சேர்க்க போராடி, 373 பந்துகளை சந்தித்து 181 ரன்கள் எடுத்தார். 19 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டு இருந்தார். 181 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் துலீப் ட்ராபி அறிமுக போட்டி சாதனையை முறியடித்து இருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் தனது 18வது வயதில் சச்சின் டெண்டுல்கர் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் முதல்முறையாக அறிமுகம் ஆனார். அப்போது தனது முதல் போட்டியில் அவர் 159 ரன்கள் எடுத்து இருந்தார்.
அதன் மூலம் பதின் பருவத்தில் துலீப் ட்ராபியில் அறிமுகமான வீரர்களில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை செய்தார். சமீபத்தில் இந்த சாதனையை பாபா இந்திரஜித் 212 ரன்கள் குவித்தும், யாஷ் துல் 193 ரன்கள் குவித்தும் முறியடித்து இருந்தனர். தற்போது 19 வயது ஆன முஷீர் கானும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
முஷீர் கான் மிகவும் நிதானமாக ஆடிய போதும் அவ்வப்போது சிக்ஸர்கள் அடிக்கவும் தவறவில்லை. இந்த இன்னிங்ஸில் அவர் 16 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்திருந்தார். அதில் ஒரு சிக்ஸ் பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரை மேல் சென்று விழுந்தது. சிறப்பாக ஆடிய முஷீர் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுப்மன் கில் 25 போட்டிகளில் விளையாடி 46 இன்னிஸ்களில் பேட்டிங் செய்து 1492 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 35 மட்டுமே. இத்தனை வாய்ப்புகள் கொடுத்தும் அவரது பேட்டிங் சராசரி 40-ஐ தாண்டவில்லை. அதனால், சுப்மன் கில்லை டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சுப்மன் கில்லுக்கு பதிலாக முஷீர் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications