மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான் இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க தனது தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக ரன் குவித்து வந்த முஷீர் கான் விரைவில் இந்திய அணியிலும் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், அவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த ஆண்டின் முக்கிய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முஷீர் கான் சமீபத்தில் நடந்த துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அடுத்து மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையிலான இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க இருந்தார். அந்த போட்டிக்கு முன் தனது தந்தை நவ்ஷத் கானுடன், அவர் தனது சொந்த ஊரான ஆஜம்கரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பு நடத்திய முகாமில் பங்கேற்று இருந்தனர். ஆனால், நவ்ஷத் கான் தன் மகனுக்கு தான் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்க விரும்புவதாக மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பிடம் அனுமதி வாங்கி இருந்தார். பயிற்சி முடிந்த நிலையில் தந்தை நவ்ஷத் கானுடன் முஷீர்கான் ஆஜம்கரில் இருந்து இரானி கோப்பை போட்டி நடக்க உள்ள லக்னோவுக்கு வெள்ளிக்கிழமை அன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே கார் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது காரில் நவ்ஷத் கான், முஷீர் கான் ஆகியோருடன் மேலும் இருவர் பயணித்தனர். இதில் முஷீர் கானுக்கு மட்டுமே அதிக காயம் ஏற்பட்டது. அவருக்கு மூளை அழற்சி ஏற்பட்டதோடு, கழுத்தில் கடுமையான வலி இருந்தது. அவருக்கு ஒரு இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
அவர் குறைந்தது 16 வாரங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. இரானி கோப்பை போட்டியை தொடர்ந்து, 2024 - 25 ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் முஷீர் கான் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
அவர் மும்பை அணியின் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்காது. அவரது தந்தையின் அறிவுறுத்தலால் தனியாக பயிற்சி மேற்கொண்டு, தனியாக லக்னோவுக்கு பயணம் செய்ததால் இந்த விபத்தில் சிக்கியிருக்கிறார். 19 வயதான முஷீர் கான் 2024 அண்டர் 19 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து இருந்தார். மும்பை அணி ரஞ்சி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 700 ரன்களை சேர்த்து இருக்கிறார். மூன்று சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார்.