டாக்கா: வங்கதேச இளம் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில், முதல் 2 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி, மேலும் ஒரு சாதனையையும் படைத்துள்ளார்.
19 வயதான இளம் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளையும், 2வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்து, இந்திய தோல்விக்கு அடித்தளம் இட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் 2 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை சாய்த்து, புதிய உலக சாதனையை படைத்தார் அவர். இந்நிலையில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரஹ்மானை ஆதிக்கம் செலுத்தவிடாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்கு 'கவனித்து' அனுப்பினர்.
இதனால், நேற்று 2 விக்கெட்டுகளை மட்டும் ரஹ்மானால் வீழ்த்த முடிந்தது. இருப்பினும், 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில், 13 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சர்வதேச பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ரஹ்மான் படைத்துள்ளார்.
முன்னதாக, 2010ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர் ரியான் ஹாரீஸ் முதல் 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால், அது 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், ரஹ்மான் சாதனை தனிக் கணக்கில்தான் சேருகிறது.