சென்னை அணிக்கு விளையாட முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது! - முத்தையா முரளிதரன்

சி க்யூப் பிராண்ட் அம்பாஸடர்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இலங்கையின் சாதனை வீரர் முத்தையா முரளிதரன், சென்னையில் உள்ள சி க்யூப் எனும் கிரிக்கெட் வளர்ச்சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தமாகியுள்ளார்.
கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் வளரும் கிரிக்கெட் வீரர்களுக்காக சர்வதேச தரத்தில் வசதிகளை உருவாக்கித் தருவதற்காக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு சி க்யூப்.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு அமைப்பு வேறெங்கும் இல்லை எனும் அளவுக்கு சிறப்பான வசதிகள், 6 ட்ராக், உள்ளரங்க கிரிக்கெட் விளையாட்டுக்கான கட்டமைப்பு, சிறந்த சர்வதேச வீரர்கள் மூலம் கோச்சிங் என பல வசதிகளை உருவாக்கித் தந்துள்ளது சி க்யூப். கிண்டி தொழிற்பேட்டையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
சி பாலச்சந்திரன் நிர்வாக இயக்குநராகவும், சங்கரநாராயணன் சிஇஓவாகவும் உள்ள இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக சர்வதேச அளவில் பல சாதனைகளைப் புரிந்து, இன்று உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகத் திகழும் முத்தையா முரளிதரன் பதவியேற்றுள்ளார்.
சி க்யூப் நிறுவனத்தின் துவக்கவிழா நிகழ்வில் புதன்கிழமை பங்கேற்ற முத்தையா முரளிதரன் நிருபர்களிடம் பேசுகையில், "சி க்யூப் போன்ற பல அமைப்புகள் இந்தியாவுக்கு, குறிப்பாக சென்னைக்குத் தேவை. காரணம், சென்னை மிகப் பெரிய நகரம். அரை கோடி மக்கள் வசிக்கும் நகரம். ஏராளமான குழந்தைகள் இன்றைக்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு உதவ கிரிக்கெட் அமைப்புகள் அவசியம். சி கியூப் அந்த அவசியத்தை நிறைவேற்றுவதாக உள்ளது.
சென்னை எனது மனைவியின் ஊர். இந்த ஊர் மாப்பிள்ளை நான். எனவே சென்னை மக்களுக்கு என்னால் முடிந்தவரை இந்த ஓய்வு காலத்தில் பணியாற்றுவேன்..." என்றார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
உலகக் கோப்பையில் இலங்கை அணி தோற்றது குறித்து வருத்தமிருக்கிறதா?
நிச்சயமாக உள்ளது. ஆனால் இந்தியா என்ற மிகச் சிறந்த அணியிடம்தானே தோற்றோம். உலகின் நம்பர் ஒன் அணி இந்தியா. அதற்கடுத்து, இலங்கை என்று வந்ததில் எனக்கு சந்தோஷமே. தோணி மிகச் சிறந்த கேப்டன். அவர் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியது.
தோணி - சங்கக்கரா இருவர் தலைமையிலும் விளையாடி உள்ளீர்கள். இருவரையும் ஒப்பிட முடியுமா?
இருவருமே முற்றிலும் நேர் மாறானவர்கள். அதனால் ஒப்பிட முடியாது. சங்கக்கரா மிக விரிவாக திட்டமிடுபவர். தோணி, தனக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லி அதை செய்ய வைப்பவர். பீல்டில், ஏதாவது தவறு நேர்ந்தால் உடனே அதை சுட்டிக் காட்டி சரி செய்துவிடுவார். ஆனால் இருவருமே அணிக்காக எந்த அளவுக்கும் களத்தில் இறங்கி வேலை செய்யக் கூடியவர்கள்.
இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சங்கக்கரா விலகியுள்ளார். அடுத்து அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் என்று யாரை சொல்ல முடியும்?
சங்கக்கரா ஒரு அருமையான கேப்டன். அவர் பதவி விலகியது துரதிருஷ்டம்தான். இப்போதுள்ள வீரர்களில் ஏஞ்சலோ மாத்யூஸ் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறேன்.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சு கோச்சாக உங்களை அழைத்தால், பணியாற்றுவீர்களா?
இந்தியா மிகப் பெரிய தேசம். இங்குள்ள திறமையாளர்களுக்கு நிகரில்லை. இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்பின் பவுலர் கும்ப்ளே இருக்கும்போது, வேறு யாரைப் பற்றியும் அவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லையே!
ஐபிஎல் சென்னை அணிக்கு விளையாட முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளதா?
நிச்சயம். மூன்று ஆண்டுகள் சென்னை அணியில் தோணி தலைமையில் விளையாடினேன். இப்போது, என்னை கொச்சி அணியினர் எடுத்துள்ளனர். அவர்களுக்கு நான் நிச்சயம் விசுவாசமாக இருப்பேன்.
Story first published: Thursday, June 7, 2012, 11:17 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications