மும்பை: உள்ளூர் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ள சாஹல், இந்திய டெஸ்ட் அணிக்காக பங்கேற்பதே தனது கனவு என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட்டர் என்ற அடையாளத்தை பெற விரும்புவதாகவும் சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் முதன்மையான வீரராக மாறியுள்ளார் சாஹல். இவரை தவிர்த்ததன் விளைவாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இருமுறை இழந்துள்ளது. அண்மையில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளையும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக சாஹல் தேர்வு செய்யப்பட்டதே இல்லை. இந்த நிலையில் இந்திய வீரர் சாஹல் திடீரென ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார். இதன் மூலம் நிச்சயமாக டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சாஹர் கூறுகையில், ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்களின் தேசிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கும். அதிலும் வெள்ளை ஜெர்சி அணிந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவுடன் தான் வளர்வார்கள். எனக்கும் அதே கனவுதான். நான் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் சாதித்துவிட்டேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் எதுவுமே செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டராக ரசிகர்கள் அடையாளப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இதனால் உள்ளூர் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு எனது கனவை எட்டிப்பிடிக்க முயற்சிக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் இந்திய அணிக்காக விளையாட வரிசைக் கட்டி நிற்கும் சூழலில், சாஹலின் முயற்சிக்கு எந்த அளவிற்கு பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.