என்னை மாதிரியல்ல.. டிவில்லியர்ஸ் மாதிரி பேட்டிங் செய்யவே எனது மகன்கள் விருப்பம்: டிராவிட்
பெங்களூர்: என் மகன்கள் இருவருமே, டி வில்லியர்சை போன்று பேட்டிங் செய்ய முயல்கிறார்களே தவிர என்னைப்போல இல்லை என்று, இந்திய ஏ அணி மற்றும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், தடுப்பு ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். டெஸ்ட் போட்டிகளில் தனியாக நின்று ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். ஆனால், சிக்சர் விளாசக்கூடிய அதிரடிக்கும் அவருக்கும் கொஞ்சம் தூரம்தான்.
இருப்பினும் தடுப்பு ஆட்டம் என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதால், ராகுல் டிராவிட்டிற்கு உலகம் முழுவதிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால், அவரது மகன்கள் சமித் மற்றும் அன்வே ஆகிய இருவரும், அதிரடி வீரரான தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ரசிகர்கள்தானாம்.

அதிரடி பசங்க
இதை ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "எனது மகன்கள் இருவருக்குமே அதிரடியாக ஆடுவதுதான் பிடித்துள்ளது. அப்படி ஆடினால்தான் எளிதில் பிரபலமாக முடியும் என்று நம்புகிறார்கள்.

கஷ்டம்தான்
டிவில்லியர்சை போன்றே பேட்டிங் செய்ய வேண்டும் என்று எனது மகன்கள் முயலுகிறார்கள். ஆனால், சீக்கிரத்திலேயே, அதுபோன்ற பேட்டிங் கஷ்டம் என்பதை உணர்ந்துவிட்டனர்" இவ்வாறு டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய ரசிகர்கள்
டிவில்லியர்சுக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். பெங்களூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் தனது 100வது டெஸ்ட் ஆட்டத்தை ஆடினார். அப்போது அரங்கத்திலுள்ள ரசிகர்கள் அனைவருமே, ஏபிடி.. ஏபிடி.. என உற்சாக குரல் கொடுத்து அவரை மைதானத்திற்குள் வரவேற்றனர்.

டிராவிட் மகன் அசத்தல்
25ம் தேதி நாக்பூரில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியிலும் அந்த உற்சாக குரல்களுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம். பெங்களூர் அளவிலான பள்ளிகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியில் சமித் அசத்தலாக ஆடி, நகரின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற விருதை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications