அப்படியே ஹர்திக் ஜெராக்ஸ் மாதிரி.. ஒவ்வொரு சிக்சரும் தரமான சம்பவம்.. ஆட்டத்தை மாற்றிய நமன் திர்!
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் வீரர் நமன் திர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களம் புகுந்த நமன் திர், அதிரடியாக சிக்ஸ், பவுண்டரியை விளாசி வெளுத்து கட்டினார். இதனால் இந்திய அணிக்கு தேவையான ரன் ரேட் கட்டுக்குளேயே இருந்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற திலக் வர்மா முக்கிய காரணமாக அமைந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 26 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 51 ரன்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களையும் விளாசினர். அதேபோல் இந்திய அணியின் வெற்றிக்கு மறைமுக காரணமாக நமன் திர் அமைந்துள்ளார்.
ஏனென்றால் இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. மிட்சல் சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் இருவரையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திலக் வர்மா நின்றிருந்தார். இந்த சூழலில் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் நமன் திர் எடுத்து கொண்டார். களமிறங்கிய உடனே ஃபெர்குசன் பந்தில் சிக்ஸ் பறக்கவிட, தொடர்ந்து அடுத்த ஓவரில் மிட்சல் சான்ட்னர் பந்திலும் ஒரு சிக்ஸ் அடித்தார்.
இதன்பின் பிரேஸ்வெல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. இதன்பின் சான்ட்னர் வீசிய கடைசி ஓவரில் அட்டாக் செய்ய முயன்று 31 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர்ரின் ஆட்டம் இந்திய அணிக்கு தேவையான ரன் ரேட்டை கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் நமன் திர் ஷாட்கள் அனைத்தும் அப்படியே ஹர்திக் பாண்டியாவை நகல் எடுத்தது போல் அமைந்தது. கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் நமன் திர் அடித்த ஷாட்கள், எளிதாக பவுண்டரியை கடந்து சென்று விழுந்தது. இதனால் இந்திய அணியின் முக்கிய ஃபினிஷராக நமன் திர் உருவாகி வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
