அடேங்கப்பா.. இலங்கையை அலறவிட்ட நமிபியா அணி.. கடைசி 5 ஓவரில் மாறிய ஆட்டம்
ஜீலாங் : டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு 164 ரன்களை இலக்காக நமிபியா அணி நிர்ணயித்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இலங்கை அணியின் தில்சான் மதுசாங்கா காயம் காரணமாக வெளியேறினார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய நமிபியா அணியின் மைக்கேல் மற்றும் திவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது.

லோப்டி ஈட்டன் பொறுப்புடன் விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, பவர்பிளே முடிவில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டை நமிபியா அணி இழந்தது. நடுவரிசையில் ஸ்டிபன் பார்ட் மற்றும் கேப்டன் எராஸ்மஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஸ்டிபன் 26 ரன்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட் அடிக்க முயன்று எராஸ்மஸ் 20 ரன்களில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய போது, அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பவுண்டரிகள் மற்றும் சிக்சராக மாற்றி இலங்கை வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
சிறப்பாக விளையாடிய பிராலிங், 28 பந்தில் 44 ரன்கள் விளாச, ஸ்மிட் 16 பந்தில் 31 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் நமிபியா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 68 ரன்களை விளாசியது. இலங்கை வீரர் பிரமோத் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications