துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில், அந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் ஹுசைன் தனது கணிப்பை கூறியிருக்கிறார். அவர் நியூசிலாந்து அணிக்கே சாதகமாக பேசியிருக்கிறார்.
நியூசிலாந்து அணி இந்த முறை நிச்சயமாகத் தோல்வியடையாது எனவும், மிகக் கடினமான கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட அணி எனவும் அவர் நியூசிலாந்தை புகழ்ந்து பேசியிருக்கிறார். முன்னதாக, இந்திய அணி துபாயில் ஆடுவதால், அது இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலை என நாசர் ஹுசைன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிதான் வெற்றி பெறும் என அவர் கூறியிருக்கிறார்.

இதைப்பற்றி நாசர் ஹுசைன் பேசுகையில், "நியூசிலாந்து அணி இந்த முறை தங்களைத் தாங்களே மூழ்கடித்துக் கொண்டு, சுருண்டுவிட மாட்டார்கள். நான் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சுடன் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இது பற்றி பேசினேன். நியூசிலாந்து அணி எப்போதும் தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்ளாது என்று அவர் கூறினார்."
"அப்படி என்றால் அவர்கள் நிச்சயமாக எழுந்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். நியூசிலாந்து பேட்டிங் வரிசையில் எப்போதுமே மிக, மிகத் திறமையான வீரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள். தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது அரையிறுதியோ அல்லது இறுதிப் போட்டியோ, அவர்கள் அங்கே நிச்சயம் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள்."
"அந்த அணியில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களும் சரியான விகிதத்தில் இருக்கிறார்கள். உதாரணமாக, கேன் வில்லியம்சன் என்ற தலைசிறந்த வீரர் இருக்கிறார். இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். ஒருவேளை நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தால், நிச்சயம் இந்திய அணி அவர்களைத் தோற்கடித்ததாகவே இருக்கும்" என்றும் நாசர் ஹுசைன் குறிப்பிட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், நியூசிலாந்தும் லீக் சுற்றில் ஏற்கனவே விளையாடி இருக்கின்றன. அந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியும், இறுதிப் போட்டி நடைபெறவுள்ள துபாய் மைதானத்தில்தான் நடைபெற்றது. அப்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.