அஸ்வினுக்கு ஒருமணி நேரம் ரெஸ்ட் கொடுத்தது தப்பு.. தோல்விக்கு கோஹ்லிதான் பொறுப்பு.. நாசிர் ஹுசைன்
பிர்மிங்காம் : இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் விராத் கோஹ்லி பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இதனால், இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லி, ஒரு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தது. விராட் கோஹ்லி 149 மற்றும் 51 ரன்கள் குவித்தார். அவர் தவிர, மற்ற எந்த இந்திய வீரரும் குறைந்தபட்சம் நாற்பது ரன்கள் கூட எடுக்கவில்லை. பந்துவீச்சாளர்களில், அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தனர்.

இந்த ஆட்டம் குறித்து பேசிய நாசிர் ஹுசைன், “கோஹ்லி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். இறுதி நிலை பேட்ஸ்மேன்களோடு (Tailenders) ஆடிய விதத்துக்காகவே, அவர் வெற்றி பெற்ற அணியில் இருக்க வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் தனியாளாக இந்திய அணியை தக்கவைத்தார். ஆனாலும், நான் நினைப்பது என்னவென்றால், அவர் தோல்விக்கு சிறிதளவாவது பொறுப்பேற்க வேண்டும்” என்றார் ஹுசைன்.
இதற்கு குறிப்பாக அவர் கூறும் காரணம் இதுதான். “இங்கிலாந்து அணி 87/7 என (இரண்டாவது இன்னிங்க்ஸில்) இருந்த போது குர்ரன் மற்றும் ரஷித் களத்தில் இருந்தனர். அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஏதோ காரணத்துக்காக களத்தில் இருந்து ஒரு மணி நேரம் வெளியே சென்றார். அதன் பிறகுதான் இந்திய அணி தன் கட்டுப்பாட்டை இழந்தது. அவர் தனது தலைமையை திரும்பிப் பார்த்து, “இடது கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக சராசரி 19 வைத்திருக்கும் ஒருவரை, 20 வயது இடது கை ஆட்டக்காரர் களத்தில் இருக்கும் போது ஏன் வெளியில் அனுப்ப வேண்டும்?” என கேட்க வேண்டும்” என கூறியுள்ளார் ஹுசைன்.
நாசிர் ஹுசைன் சொல்லும் நேரத்தில் தான், சாம் குர்ரன் அதிரடியாக ஆடி 65 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அதன் காரணமாகவே 87/7 என இருந்த இங்கிலாந்து அணி 180 ரன்கள் வரை குவித்தது. ஒருவேளை அஸ்வின் அந்த நேரத்தில் பந்து வீசியிருந்தால், சாம் குர்ரன் தடுமாறி இருக்க வாய்ப்புண்டு. இந்த யோசனை ஒரு தலைவனாக விராட் கோஹ்லிக்கு ஏன் வரவில்லை என்பதே ஹுசைனின் கேள்வி.
ஒரு கேள்வி என்றாலும், நச்சென்று தான் இருக்கிறது. இதற்கு கோஹ்லியோ, அல்லது அவரது குரு ரவி சாஸ்திரியோ பதில் சொல்வார்களா?
Story first published: Sunday, August 5, 2018, 12:23 [IST]
Other articles published on Aug 5, 2018


Click it and Unblock the Notifications