வேற.. வேற.. யார்க்கர் மட்டுமில்லீங்க... மீண்டும் தன்னை நிரூபித்த யார்க்கர் கிங்!
சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி சிட்னியில் தனது இரண்டாவது டி20 போட்டியை விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் இந்தியா பௌலிங்கை தேர்வு செய்த நிலையில் யார்க்கர் கிங் நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த இரண்டு டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்ய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடராஜன்.

டி20 தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் ஆடிய ஒருநாள் தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிய டி20 தொடரின் முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

70 ரன்களில் 2 விக்கெட்டுகள்
ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் விளையாடியதன்மூலம் சர்வதேச அளவில் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடினார் யார்க்கர் கிங் டி நடராஜன். இதில் 10 ஓவர்களையும் போட்டு 70 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

30 ரன்களில் 3 விக்கெட்டுகள்
இதேபோல கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியின்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் போட்டியை விளையாடினார். அந்த போட்டியில் 4 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் தான் யார்க்கரில் மட்டும் கிங் இல்லை என்பதை நிரூபித்தார். ஸ்விங் உள்ளிட்ட அவரது பௌலிங்கில் பந்துகள் பறந்தன.

20 ரன்களில் 2 விக்கெட்டுகள்
இந்நிலையில் இன்று ஆடப்பட்ட இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீசிய நடராஜன், 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்த தொடரில் இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நடராஜன்.


Click it and Unblock the Notifications