அவர்தான் வேண்டும்.. மொத்தமாக நடராஜனுக்கு குறிவைக்கும் முக்கிய அணிகள்.. இப்பவே இப்படியா? செம!
சென்னை: தமிழக வீரர் நடராஜனுக்கு வரும் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரை முக்கிய அணிகள் ஏலம் எடுக்க முயற்சிக்கும் என்று கூறுகிறார்கள்.
தமிழக வீரர் நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவர் ஆடிய விதம் பலரையும் கவர்ந்து இருக்கிறது.
முக்கியமாக இவரின் பவர்பிளே பவுலிங் மற்றும் டெத் ஓவர் பவுலிங் பெரிய அளவில் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியில் இவர் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

நிலைமை என்ன
நடராஜனுக்கு வரும் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரை முக்கிய அணிகள் ஏலம் எடுக்க முயற்சிக்கும் என்று கூறுகிறார்கள். தற்போது இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் ஏற்கனவே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

ஸ்பீட் பவுலர்கள்
ஹைதராபாத் அணியில் சந்தீப் சர்மா, கலீல் அஹமது, விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், மிட்சல் மார்ஷ் உள்ளனர். இதுபோக ஸ்பின் பவுலிங் செய்ய ரஷீத் கான் போன்ற வீரர்களும் உள்ளனர். இதன் காரணமாக நடராஜனை ஒருவேளை ஹைதராபாத் அணி ஆர்டிஎம் முறைப்படி எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஏலம்
அடுத்த வருடம் நடக்கும் ஏலத்தில் ஹைதராபாத் அணி ரஷீத் கான், வார்னர், வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், பிரைஸ்டோ ஆகியோரை தக்க வைக்கும். இதன் காரணமாக நடராஜன் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் நடராஜன் ஏலத்திற்கு வந்தால் அவர் அதிக தொகையில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

டெத்
நல்ல டெத் பவுலர்கள் இல்லாமல் இருக்கும் பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் இவரை எடுக்க முயற்சி செய்யும். முக்கியமாக சென்னை அணி இவரை ஏலம் எடுக்க தீவிரமாக முயலும் என்று கூறுகிறார்கள். தமிழர் என்பதால் சிஎஸ்கே அணி இவரை கொக்கி போட்டு தூக்கும் என்கிறார்கள்.

அதிக வாய்ப்பு
இவர் மற்ற வீரர்களை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் புதிதாக உருவாக்கப்படும் இரண்டு அணிகளில் இவர் ஏலம் எடுக்கப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள ஏலத்தில் இவர் அதிக அளவில் முக்கியத்துவம் பெற போகிறார் என்கிறார்கள் .


Click it and Unblock the Notifications