வெறியாட்டம் ஆடிய சின்ன தல.. கதிகலங்கிய மும்பை இந்தியன்ஸ் ஆல் ரவுண்டர்.. 28 பந்தில் 53 ரன்!
டெக்சாஸ்: 2024 நேஷனல் கிரிக்கெட் லீக் என்ற 10 ஓவர் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ யார்க் லயன்ஸ் சார்பில் ஆடிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி எதிரணியான லாஸ் ஏஞ்சல்ஸ் வேவ்ஸ் அணியை கதிகலங்க வைத்தார். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார் சுரேஷ் ரெய்னா.
அவர் ஆறு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னா ஆடிய அதிரடி ஆட்டம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பத்து ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூ யார்க் லயன்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா செயல்பட்டு வருகிறார். பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரும், ஆஸ்திரேலிய வீரருமான டிம் டேவிட் இடம் பெற்று இருந்தார்.

அவர் இந்த போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். அதில் மட்டும் 31 ரன்கள் சேர்த்தது நியூ யார்க் அணி. உபுல் தரங்கா, சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து அபாரமாக ஆடினார். அவர் டிம் டேவிட் வீசிய இரண்டு ஓவர்களில் ஐந்து ஃபோர் அடித்தார். அதன் காரணமாகவே டிம் டேவிட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார்.
சுரேஷ் ரெய்னாவுக்கு ஒத்துழைப்பு அளித்த ஆடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கா 23 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். அவர் ஆறு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்திருந்தார். ரெய்னா 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த நியூ யார்க் லயன்ஸ் அணி பத்து ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய லாஸ் ஏஞ்சலஸ் வேவ்ஸ் அணி பத்து ஓவர்களில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்களை இழந்து இருந்தது. இதை அடுத்து நியூ யார்க் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications