இந்தூர்: நாளை தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் களமிறங்க உள்ளார் கவுதம் கம்பீர். இரு வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார் கம்பீர் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முதல் இரு டெஸ்ட் போட்டிகளையும் வென்று கோப்பையை வென்ற நிலையில், நாளை இந்தூரில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. கே.எல்.ராகுல் காயமடைந்ததால் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், தவானும் காயமடைந்த காரணத்தால், 3வது டெஸ்டில் கம்பீருக்கு வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

கேப்டன் கோஹ்லி நேற்று நிருபர்களிடம் கூறுகையிலும், இரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காயமடைந்துள்ள நிலையில், 3வதாக கம்பீருக்கு இயல்பாகவே வாய்ப்பு கிடைக்கத்தானே செய்யும் என கூறி கம்பீர் வருகையை உறுதி செய்தார்.
2014ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு கம்பீர் இப்போதுதான் டெஸ்ட் அணிக்காக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.