டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே இளம் வயது கேப்டன் இவர்தான்.. நேபாள அணியின் ரோஹித் சாதனை
டல்லாஸ் : டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இளம் வயது கேப்டன் என்ற பெருமையை பெற்று உள்ளார் நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல்.
2024 டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏழாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளுக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவே முதல் போட்டி ஆகும். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் நேபாள அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் குறித்த சாதனை ஒன்று வெளியானது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இளம் வயது கேப்டன் அவர் தான் என்ற அந்த சாதனை குறிப்பிடப்பட்டது. அவரது வயது 21 வருடம், 276 நாட்கள் ஆகும். இதன் மூலம் 18 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்து இருந்தார்.
இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக செயல்பட்ட பிராஸ்பார் உட்சேயா தான் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய இளம் வயது கேப்டனாக இருந்தார். அவரது வயது அப்போது 22 வருடம், 170 நாட்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இருக்கும் நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல், 21 வருடம், 276 நாட்கள் வயதில் இந்த சாதனையை செய்துள்ளார்.
இந்த போட்டியில் நேபாள அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்களில் வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்களை இழந்தது. அந்த அணியில் அதிக ரன் குவித்த ஒரே வீரர் கேப்டன் ரோகித் பவுடல் மட்டுமே. அவர் 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவே நேபாள அணியின் மிகக் குறைவான ஸ்கோர் ஆகும்.


Click it and Unblock the Notifications