டல்லாஸ் : 2024 டி20 உலகக் கோப்பையின் ஏழாவது போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பெற்று இருக்கும் நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரிலேயே நேபாள அணியின் துவக்க வீரர் ஆசிப் ஷேக் விக்கெட்டை வீழ்த்தியது நெதர்லாந்து அணி. அதன் பின் நேபாள அணி ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற விகிதத்தில் நிதானமாக ரன் சேர்த்தது. பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததும் இதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். அவர் 37 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். பின்வரிசை வீரர்கள் குல்சன் ஷா 14 ரன்களும், கரண் 17 ரன்களும் சேர்த்தனர். நேபாள அணி 19.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கடந்த ஆண்டு டி20 வரலாற்றிலேயே ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை செய்து இருந்தது நேபாள அணி. மங்கோலியாவுக்கு எதிராக 314 ரன்கள் குறித்து உலக சாதனை செய்து இருந்தது, அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் மற்ற கத்துக்குட்டி அணிகளை நேபாள அணி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நெதர்லாந்து அணியோ, "நாங்கள் கத்துக் குட்டி அணி அல்ல." என்று சொல்லும் வகையில் வெறும் 106 ரன்களுக்கு நேபாள அணியை சுருட்டியது. அந்த அணியின் டிம் ப்ரிங்கில் 3 விக்கெட், வான் வீக் 3 விக்கெட், வான் மீக்கரன் 2 விக்கெட், பாஸ் டே லீடே 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து இந்த கடினமான பிட்ச்சில் நெதர்லாந்து அணி சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் மைக்கேல் லெவிட்டே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். எனினும் அடுத்து வந்த விக்ரம் ஜித் சிங் 22 ரன்கள் சேர்த்தார். இந்த பிட்ச்சில் இதுவே நல்ல பேட்டிங் என கருதப்பட்டது. ஒரு பக்கம் மற்றொரு துவக்க வீரர் மேக்ஸ் ஓடோ நிலைத்து நின்று அதிரடியாக ரன் சேர்த்தார். மறுபுறம் சைபிரன்ட் 14 ரன்கள், ஸ்காட் எட்வர்ட்ஸ் 5 ரன்கள், பாஸ் டே லீடே 11 ரன்கள் சேர்த்தனர்.
மேக்ஸ் ஓடோ 48 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அவர் நான்கு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து 18.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தங்கள் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது நேபாள அணி.